புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் பாஜகவை எதிர்த்து தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றனர். ‘சத்ரிய ஸ்வபிமான் பஞ்சாயத்து’ எனும் பெயரிலான இக்கூட்டங்கள், பாஜகவை கவலை அடையச் செய்துள்ளது.
உ.பி.யின் மேற்குப்பகுதியின் எட்டு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இச்சூழலில் உபியில் அதிகம் வசிக்கும் தாக்குர் சமூகத்தினர் பாஜக மீது அதிருப்தி காட்டி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக உ.பி.,யின் மேற்குப்பகுதியில் பஞ்சாயத்துகளை கூட்டி பாஜகவை விமர்சிக்கின்றனர். நேற்று, மேற்குப்பகுதியிலுள்ள ஹாபூரில், ‘சத்ரிய ஸ்வபிமான் மஹாபஞ்சாயத்து’ நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட தாக்குர் சமூகத்தினர் ஆளும் பாஜக மீது கடும் அதிருப்தியை காட்டி உள்ளனர். சத்ரியர்களின் முக்கிய சமூகமாகத் தாக்குர் கருதப்படுகிறது.
இந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் உ.பி.யின் முதல்வரான யோகி ஆதித்யநாத். இப்பஞ்சாயத்தில் தாக்குர் சமூகத்தின் பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.பாஜகவுக்கு எதிராகப் பேசியவர்கள் இறுதியில் அக்கட்சியை கண்டித்து தீர்மானங்களும் நிறைவேற்றினர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் உ.பி.யில் ஆளும் பாஜகவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பஞ்சாயத்தில் கலந்துகொண்ட கிஸான் மஸ்தூர் சங்கத்தின் தேசியத் தலைவரான புரண் சிங் பேசுகையில், “சத்ரியர்களான தாக்குர் சமூகத்தினர் பற்றிச் சொல்வதை போல் பாஜக செய்வதில்லை. நாம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியாக இருந்து வருகிறோம். இன்று நம் தாக்குர் சமூகத்தினர் பாஜகவால் பாதிக்கப்படுகின்றனர். நம் சமூகத்தினர் உரிய எண்ணிக்கையில் வேட்பாளர்கள் அமர்த்தப்படவில்லை. இதன்மூலம், உபியின் தாக்குர்களை நசுக்க முயற்சிக்கப்படுகிறது. இதற்கு நம் சமூகம் கண்டிப்பாகப் பதிலடி தர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இதே பஞ்சாயத்தில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேத்தியான மஞ்சரி சிங் கூறுகையில், “நம் சமூகத்தை வஞ்சிக்கும் அரசை நம்மால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இதுபோன்ற அரசை எதிர்க்க நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் சமூகத்தின் பலம் என்னவென்பதை இந்த அரசுக்குக் காட்ட வேண்டும்.” எனப் பேசியிருந்தார்.
இதுபோல், தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி தம் கோபத்தை பாஜக மீது காட்டுவது முதன்முறையல்ல. ஹாபூருக்கு ஒருநாள் முன்னதாக மீரட்டின் கேடா கிராமத்திலும் பஞ்சாயத்து கூட்டி பாஜக விமர்சிக்கப்பட்டது.
இதற்கும் முன்பாக கடந்த வாரம் சஹரான்பூரிலும் தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி பாஜகவின் நடவடிக்கைகள் கண்டித்தனர். முதல்வர் யோகி பரிந்துரைத்த தாக்குர் சமூகத்தினரில் ஒருவர் கூட வேட்பாளர்களாகவில்லை எனப் புகார் கூறினர். காஜியாபாத்தின் எம்பியான மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்குக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாததும் கண்டிக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்துக்களில் ராஜ்புத் சமூகத்தின் முஸ்லிம்களும் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இக்கூட்டத்தில் அடுத்த கட்ட வாக்குப்பதிவிலும் பாஜகவுக்கு ஆதரவளிப்பதில்லை எனப் பலரும் ஆவேசம் காட்டியது பாஜகவை கவலைப்பட வைத்துள்ளது. இது குறித்து பாஜகவின் இளைஞர் பிரிவின் பிராந்தியத் தலைவரான சுக்வீந்தர் சோம் கூறும்போது, “சத்ரிய சமூகம் முழுவதும் பாஜகவுடன் உள்ளனர். இந்த பஞ்சாயத்துக்களுக்கு வேறு எதுவும் தனிப்பட்டக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தேசப்பற்றுடைய நம் தாக்குர் சமூகம் தாமரைக்கு ஆதரவாகவே உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பியின் முதல்கட்ட வாக்குப்பதிவில் முசாபர்நகர், கைரானா, சஹரான்பூர், புஜ்னோர், நகினா, முராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித் ஆகியன இடம் பெற்றுள்ளன.-