30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1993ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் `கல்நாயக்’.
இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கை தயாரித்து இயக்கியிருந்தார். இன்று ‘கே.ஜி.எஃப்’, ‘லியோ’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகிலும் பிரபலமாகியிருக்கும் சஞ்சய் தத் இத்திரைப்படத்தில் நாயகனாக, ‘பல்ராம்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் திரைப்படமான இது, அந்தச் சமயத்தில் பாலிவுட்டில் பெரியளவில் ஹிட்டடித்தப் படம். குறிப்பாக, ‘சோலி கே பீச்சே க்யா ஹே’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் முணுமுணுக்க வைத்தது.
சஞ்சய் தத், நடித்திருந்த ‘பல்ராம்’ கதாபாத்திரம் பலரையும் கவர்ந்த கேங்ஸ்டர் வேடமாக மாறிப்போனது. அதனால் இதைத் தொடர்ந்து இதே பாணியில் பல கேங்ஸ்டர் படங்கள் வரத் தொடங்கின. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் இயக்குநர் சுபாஷ் கை, இதன் இரண்டாம் பாகத்திற்கானப் பணிகளில் இறங்கியிருக்கிறார். அதன் ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிந்துவிட்டன என்கிறார்கள்.
இந்நிலையில் சஞ்சய் தத் நடித்த ‘பல்ராம்’ எனும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க, பல முன்னணி நடிகர்களை அணுகி வருகின்றனர். இதற்காக சமீபத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியிருக்கும் யஷ் (கே.ஜி.எஃப்), ரன்பீர் (அனிமல்), அல்லு அர்ஜுன் (புஷ்பா), ரன்வீர் சிங் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கல்நாயக்’ படத்தில் நடிக்க இந்த நால்வரில் உங்களின் சாய்ஸ் யார் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.