கட்டாக்,
ஒடிசாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால், 18 நகரங்களில் வெப்ப நிலை 41 டிகிரி செல்சியஸை விட கூடுதலாக பதிவாகி உள்ளது.
இவற்றில், தால்சர் என்ற நிலக்கரி சுரங்க பகுதியில் அதிக அளவாக, 43.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மனோரம மொகந்தி இன்று கூறியுள்ளார்.
புவனேஸ்வரில் 41.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், கட்டாக்கில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது. வருகிற 5 நாட்களுக்கு ஒடிசா முழுவதும் வெப்ப அலை பரவ கூடிய சூழல் உள்ளது என எச்சரிக்கையும் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஒடிசாவில் இன்று முதல் 20-ந்தேதி வரையிலான 3 நாட்களில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
ஒடிசாவின் பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸை விட கூடுதலாக பதிவாக கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கியோஞ்சர், மயூர்பஞ்ச், பத்ரக், பாலசோர், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, தேன்கனல், ஜாஜ்பூர், நயாகார், காந்தமால், கோராபுத், மல்கன்கிரி, அங்குல் மற்றும் பவுத் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது.
பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, கட்டாக், ஜகத்சிங்பூர், பூரி, குர்தா, நயாகார், கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெப்ப மற்றும் ஈரநிலை சார்ந்த சூழல் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.