மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஏப்ரல் 21-ம் தேதி மாலை 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை வழங்கக் கோரி சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ‘அனைத்து துறை அதிகாரிகளும் மக்களவைத் தேர்தல் பணியில் உள்ளனர். சித்திரை திருவிழா ஏற்பாடுகளில் பெரும்பாலானவை நிறைவடைந்துள்ளது. திருக்கல்யாணத்தை கோயில் வெளியே பக்தர்கள் காணும் வகையில் 20 மெகா எல்இடி திரைகள் அமைக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததும் விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தவுடன் விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். ஏப்ரல் 21 மாலைக்குள் விழா ஏற்பாடுகள் நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா? இதுவரை என்னென்ன ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது? அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்பு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளதா? மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாக புகார் வருகிறது. மீனாட்சியம்மன் கோயில், சுவாமி வலம் வரும் மாசி வீதிகளிலும் மின் கம்பிகளை பூமிக்கடியில் பதிக்கலாமே? இதற்கு ஏன் நிரந்தர தீர்வு காண கூடாது?’ என கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதிகள், ‘சித்திரை திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஏப்ரல் 21, மதியம் 2 மணிக்குள் முடித்திருக்க வேண்டும். திருவிழா ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் தரப்பில் 21-ம் தேதி, மாலை 3 மணிக்கு ஆய்வு செய்யப்படும். திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஏப்ரல் 22-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.