புதுடெல்லி: ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் இன்று (ஏப்.18) பாதுகாப்பாக கொச்சி திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எஞ்சிய 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட தகவல்: ‘தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஈரான் அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் சரக்கு கப்பல் எம்எஸ்சி ஏரீஸில் இருந்த 17 இந்திய பணியாளர்களில் ஒருவரான கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆன் தேஸ்ஸா ஜோசப் இன்று மதியம் கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். எம்எஸ்சி ஏரீஸ் கப்பலில் பயணித்த இந்திய பணியாளர்களின் நலனை உறுதி செய்வது தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வியாழக்கிழமை மதியம் கொச்சி வந்திறங்கிய ஆன் தேஸ்ஸா ஜோசப்பை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விமான நிலையத்தில் வரவேற்றார்.
கப்பல் கடத்தல்: ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அக்கப்பல் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் பின்னர் தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 14-ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.