ஓசூர்: தேன்கனிக்கோட்டை மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கழுதை மீது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராமம் கடமாகுட்டை. இக்கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு மலையில் இருந்து 3.5 கி.மீ கீழே வந்து செல்கின்றனர். சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான சாலையில் செல்லும் நிலை உள்ளது.
இக்கிராமத்தில் உள்ள 90 வாக்காளர்களுக்காக, இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் நாளை (ஏப்.19) கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வியாழக்கிழமை மதியம் மலையடிவாரத்தில் உள்ள குமாரசெட்டி ஏரியில் இருந்து வனத்துறை, போலீஸார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர், கழுதை மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி கொண்டு மலைக்கு கொண்டு வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, “கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை நாங்கள் தேர்தலில் வாக்களிக்க 7 கி.மீ நடந்தே, பெட்டமுகிலாளம் கிராமத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குகளை செலுத்தி வந்தோம். நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பதால், வாக்காளர்கள் பலர் வாக்களிக்க செல்லவில்லை.
இதனால், எங்கள் கிராமத்தில் உள்ள 90 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் தவறாமல் எங்களது வாக்கினை செலுத்தி விடுகிறோம். இருப்பினும், எங்கள் கிராமத்துக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தந்தால், எங்களுக்கும், கிராமத்துக்கு வந்து செல்லும் அலுவலர்களுக்கு சிரமம் இருக்காது”, என்றனர்.