சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. அந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தேடி திரிந்த துயரமான நேரம் அது.
மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலை பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கேமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம். ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.
அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தனது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முகமது சலேம், 39 வயதான பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010-ல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.
“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன்.
அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்த காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார். விருது வென்ற படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தது.
— mohammed jad salem (@msalem66) April 18, 2024