சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருக்கும் பட்சத்தில், அப்போது வரை உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வாக்காளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம்6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாய்தளம், நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள், குழந்தைகள் பாதுகாப்பு மையம், சக்கர நாற்காலி மற்றும் அதை இயக்கதன்னார்வலர் போன்ற வசதிகளையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழக தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோருக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதியும் பதிவு அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று காலையே, 39 தொகுதிகளிலும் உள்ள 31 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் 177 கூடுதல் வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய, 68,321 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 3.32 லட்சம் தேர்தல் பணியாளர்கள், அந்தந்த பயிற்சி மையங்களில் இருந்து கணினி குலுக்கல் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டனர். நுண் பார்வையாளர்கள், காவல் துறையினரும் பிரிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில், 20 சதவீதம் உபரியையும் சேர்த்து, 1,58,568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் (ஒப்புகை சீட்டு) இயந்திரங்கள் மக்களவை தேர்தலுக்கும், 325 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 326 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 346 விவிபாட் இயந்திரங்கள் விளவங்கோடு தொகுதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
1.30 லட்சம் பேர் பாதுகாப்பு: தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 190 கம்பெனி துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நியமித்துள்ளது. இவர்கள் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஒரு லட்சம் காவல் துறையினர், 12,220 முன்னாள் ராணுவத்தினர், 1,931 ஓய்வு பெற்ற காவல் துறையினர், கேரளா, ஆந்திராவில் இருந்து வந்த 3,500 ஆயுதப் படையினர், ஆந்திராவில் இருந்து 2,500 மற்றும் தெலங்கானாவில் இருந்து 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1.30 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 181 மிக பதற்றம், 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள், முந்தைய தேர்தலின் போது நடைபெற்ற நிகழ்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, அமைதியான முறையில் தேர்தலை நடத்தவும், நிகழ் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்கவும் 44,801 வாக்குச்சாவடிகள் அதாவது 65 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, வெப் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கும் முன்னதாக, இன்று காலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்படும். அதன்பின் 6 மணிக்கு ‘மாக் போல்’ எனப்படும் ஒத்திகை நடத்தப்படும், இதில் 50 வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டு, அவை அழிக்கப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயாராக, சீலிடப்பட்டு வைக்கப்படும்.
ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு தனியாக பாதுகாக்கப்படும். அதன்பின் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மின்னணு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்படும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின், மண்டல குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று, பாதுகாப்புடன் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரை அங்குள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்படும்.