LSG vs CSK Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் (IPL 2024) அதன் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் தங்களின் 7 லீக் ஆட்டங்களில் விளையாடிவிட்டன. சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ அணிகள் மட்டும் 6 போட்டிகளை தற்போது விளையாடி உள்ளன.
அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (LSG vs CSK) லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் சந்திக்கிறது. சென்னை அணி 4 வெற்றியுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி 3 வெற்றியுடன் 5வது இடத்திலும் உள்ளன. அந்த வகையில் இன்றைய போட்டிகள் இரு அணிகளும் முக்கியமானதாகும்.
மொயின் அலிக்கு வாய்ப்பு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், விசாகப்பட்டினத்தில் டெல்லி அணியிடனும், ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இருப்பினும், பலமான மும்பை அணியை அந்த சொந்த மண்ணிலேயே சிஎஸ்கே அணி வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.
பந்துவீச்சில் காம்பினேஷன் சிஎஸ்கே அணிக்கு சரியாக இருக்கிறது என்றாலும் பேட்டிங்கில் மிட்செலுக்கு பதில் மொயின் அலி கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. பதிரானா மற்றும் முஸ்தபிசுர் ஆகியோர் இருவரும் இருப்பதால் தீக்ஷனாவுக்கு வாய்ப்பு இல்லை, எனவே, ஒரு ஆப் ஸ்பின்னராகவும், மிடில் ஆர்டர் பேட்டராகவும் மொயின் அலியை (Moein Ali) கொண்டு முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இன்று மிட்செலுக்கு பதில் மொயின் அலி களமிறங்குவார் என கூறப்படுகிறது. இவர் இந்த தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடியிருந்தார்.
லக்னோ அணியில் நிலவும் குழப்பம்
சிஎஸ்கே அணி அதன் காம்பினேஷனில் உறுதியாக இருக்கும் சூழலில், லக்னோ அணி (Lucknow Super Giants) இன்னும் அதன் சரியான காம்பினேஷனை கண்டடையவில்லை. பேட்டிங்கில் நம்பர் 3 ஸ்பாட் அவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. பதோனி, பூரன் ஆகியோர் மட்டும் தொடர்ந்து ரன்களை குவித்து வருகின்றனர். கேஎல் ராகுலும் நல்ல பார்மில் இருக்கிறார். பேட்டிங்கில் டி காக்கிற்கு பதில் கையில் மேயர்ஸ் இன்று விளையாடலாம் என தெரிகிறது.
பலவீனமான லக்னோ பந்துவீச்சு
லக்னோ அணி பந்துவீச்சில் மோஷின் கான், ஷமார் ஜோசப் ஆகியோருடன் குர்னால் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்துவீச்சில் தாக்குதலை மேற்கொள்வார்கள். அர்ஷத் கான் அல்லது எம் சித்தார்த் இம்பாக்ட் வீரர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் யாஷ் தாக்கூருக்கு பதில் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவார் என கூறப்படுகிறது. மயங்க் யாதவ் (Mayank Yadav) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத நிலையில், பந்துவீச்சும் பலவீனமாகிவிட்டது.
வருகிறார் மயங்க் யாதவ்
கடந்த இரண்டு போட்டிகளில் லக்னோ மோசமான தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அவர்களின் பந்துவீச்சுதான். எனவே, அவர்களின் பந்துவீச்சை ஸ்பெஷலாக்க மயங்க் யாதவ் இன்று விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் லக்னோ அணியின் லான்ஸ் க்ளூஸனர்,”சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. அவர் வலைப்பயிற்சியின் போது பந்துவீசுகிறார், ஆனால் அவரது உடற்தகுதி எங்கள் முன்னுரிமை. ஆனால் அவர் பங்கேற்பது குறித்து எதுவும் கூற முடியாது” என்றார். மயங்க் யாதவ் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவையும் லக்னோ அணி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது.
சமாளிக்குமா சிஎஸ்கே?
மயங்க் யாதவ் இன்று விளையாடும்பட்சத்தில் வேகத்தை நுணக்கமாக எதிர்கொள்ளும் ருதுராஜ் கெய்கவாட், தூபே, ரஹானே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மயங்க் யாதவ் களமிறங்கும்பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவுதான் எனவும் கூறலாம்.