மணிப்பூரில் இரு இனக் குழுக்களிடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்தில், 200 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராணுவம், துணை ராணுவத்தை இறக்கிப்பார்த்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிக்கடி ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் மொய்ராங் தொகுதியின், தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மக்கள் இன்று காலை வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அடையாளம் தெரியாத ஒரு கும்பல், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த பதற்றமான மாநிலத்தில் ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்கள் தேர்தல் செயல்முறையை பாதித்துள்ளன. இந்த அமைதியற்ற சம்பவம், வாக்காளர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனாலும். தொடர்ந்து மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் மற்றும் இனக்கலவரத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 85 சிறப்பு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.