கிழக்கு நாகாலாந்தில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் – தனி மாநில கோரிக்கையால் வீட்டில் முடங்கிய மக்கள்

கோஹிமா,

கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள மக்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்குள்ள 6 மாவட்டங்களில் மொத்தம் 738 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் 7 நாகா பழங்குடி இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (ENPO) சார்பில் காலவரையற்ற ஊரடங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஊரடங்கு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு சாலைகளும், வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களும் பல வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு முதல் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு சார்பில் தனி மாநில கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 13.25 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், கிழக்கு நாகாலாந்தில் மட்டும் 4 லட்சத்து 632 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.