ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி கமுதி அருகே வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து வாக்காளர்கள் மத்தியில் அதிகாரிகள் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி கமுதி அருகே கீழவில்லனேந்தல், மேலவில்லனேந்தல் கிராம வாக்காளர்களுக்காக கீழவில்லனேந்தலில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் 1 முதல் 25 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதில், 1-வது இயந்திரத்தை இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இயந்திரத்தை முதலிலும் வைத்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பகல் 1 மணி முதல் 1.30 வரை அரை மணி நேர வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் இயந்திரங்கள் சரியாக வைக்கப்பட்டு மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது. கீழவில்லனேந்தல் உள்ளிட்ட சாயல்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளில் 15 முதல் 18 வாக்குச்சாவடி மையங்களில் இது போன்று வாக்குப்பதிவு இயந்திரத்தை வரிசைப்படி வைக்காமல் மாற்றி வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதேபோன்று பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் உள்ள மேற்கு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். வாக்காளர்கள் புகார் அடிப்படையில் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டது. இதனால் சற்று நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
முதல் வாக்குப்பெட்டியில் ஆறாவது இடத்தில் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியும், இரண்டாவது வாக்கு பெட்டியில் ஆறாவது இடத்தில் (22 ஆவது வரிசை எண்) முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இடம் பெற்றுள்ளனர்.
இரண்டு வாக்குப்பெட்டிகளிலுமே ஆறாவது இடத்தில் இருபெரும் வேட்பாளர்கள் இருப்பதால் வயதான மற்றும் கல்வியறிவு இல்லாத வாக்காளர்களை குழப்பும் வகையில் தேர்தல் அதிகாரிகள் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர்.