மதுரை: செல்ஃபி பாய்ன்ட், குழந்தைகள் விளையாடும் இடம், பாலூட்டும் அறை, வாக்களிக்க வரும் வாக்காளர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற தேர்தல் அலுவலர்கள் என மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முன்மாதிரி வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை கவர்ந்தது.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மத்தி, மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள், மதுரை மக்களவைத்தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளாகவும், மற்றவை, விருதுநகர் மற்றும் தேனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டவையாகவும் உள்ளன.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இந்த 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,573 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிடாரிப்பட்டி உள்ளபட 155 பதட்டமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம், சட்டமன்றத்திற்கு இரண்டு மாதிரி வாக்குச்சாவடியை (Model Polling Station) என்ற முறையில் மொத்தம் 20 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலூர் அட்டுக்குளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, மதுரை கிழக்கில் உலகனேரி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தானில் சமயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை வடக்கில் நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை தெற்கில் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி, மதுரை மத்தியில் சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை மேற்கில் கோச்சடை ஜான் மெட்ரிக் பள்ளி, திருப்பரங்குன்றத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டியில் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதுபோல் பெண்கள் தேர்தல் அலுவலர்கள் மட்டுமே நிர்வகிக்கும் 10 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட சிறுத்தூரில் உள்ள ஜெயின் வித்தியாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெண் தேர்தல் அலுவலர்கள் மட்டுமே பணிபுரியம் ‘பிங்’ வாக்குச்சாவடி வாக்காளர்களை கவர்ந்தது. இதில், வாக்குச்சாவடி ‘பிங்’ வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு பணியாற்றும் பெண் தேர்தல் அலுவலர்கள் ‘பிங்க்’ வண்ணத்தில் ஆடைகள் அணிந்து வந்திருந்தனர்.
அதேபோல், ஒத்தக்கடை அரசினர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் இந்த வாக்குச்சாவடியின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண் தேர்தல் அலுவலர், ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.
இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாடும் இடம், வாக்களித்தபின் வாக்காளர்கள் ஒற்றை விரலை காட்டி புகைப்பட எடுக்க செல்ஃபி பாயிண்ட், பாலூட்டும் அறை போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள் அமருவதற்கு அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள், மின்விசிறிகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.