தனுஷின் 50வது படமான `ராயன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது தவிர, தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கும் `குபேரா’ படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.
‘கேப்டன் மில்லர்’ படத்திற்குப் பிறகு தனுஷின் ‘ராயன்’ வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படமிது. தனுஷுடன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு மற்றும் படத்தொகுப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசர், சிங்கிள் அப்டேட் குறித்து விசாரித்தோம்.
முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் தனுஷின் கதாபாத்திரம் பெயர் காத்தவராயன் என்கிறார்கள். கேங்க்ஸ்டர் கதை என்றாலும், இந்தக் கதையில் அண்ணன் – தங்கைக்கான எமோஷனலான விஷயங்களும் பேசப்படும் என்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் சிங்கிள் விரைவில் வெளிவரும் என்றும், அதன் பிறகே டீசர் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். ‘மாரி’ படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். அதன் பிறகு ‘ராயன்’ படத்தில் இணைந்திருக்கின்றனர். பிரபுதேவா நடன அமைப்பில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். தனுஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல்தான் முதல் சிங்கிளாக வெளிவர இருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது. முதல் சிங்கிள் அநேகமாக அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
அதைப் போல படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் திட்டமிடப்படவில்லை. அதே சமயம், ஃபைனல் கட் வேலைகள் பரபரக்கின்றன. அநேகமாக ஜூன் அல்லது ஜூலையில் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். ஜூலையில் தனுஷின் பிறந்த நாள் வருவதால், அவரது பர்த் டே ட்ரீட் ஆகவும் படம் வெளியாகலாம் என்ற பேச்சும் இருக்கிறது.
இன்னொரு விஷயம், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `குபேரா’ படப்பிடிப்பு அடுத்து வரும் 22ம் தேதி மும்பையில் தொடர்கிறது. மும்பை ஷெட்யூல் படப்பிடிப்பு பத்து நாள்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.