சென்னை: தேர்தலில் வாக்களிக்காத பணியாளர்களுக்கு பொது விடுமுறை இல்லை என உத்தரவிட்ட உள்துறை செயலர் மீது தேர்தல் நடத்தை விதிமீறலுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த உத்தரவை உள்துறை திரும்பப் பெற்றது.
இதுகுறித்து, சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் உள்ளிட்டோர், தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக உள்துறை செயலர் அமுதா, ஏப்.18-ம் தேி வெளியிட்டுள்ள அலுவலக உத்தரவில், தமிழகத்தில், ஏப்.19-ம் தேதி நடைபெறும் மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது. உள்துறை, மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.
மேலும், துறையின் 2-ம் நிலைஅலுவலர்கள், தங்கள் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் வாக்குகளை முறையாக பதிவுசெய்துள்ளார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். வாக்குசெலுத்தாத பணியாளர்களின் விவரங்களை, அப்பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் இருந்து தற்செயல் அல்லது ஈட்டிய விடுப்பை கழிப்பதற்கு ஏதுவாக அலுவலக நடைமுறை பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், வாக்களிக்காத பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த பொது விடுமுறையை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு: இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும். இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.
தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையே வாக்களிக்க யாராலும்கட்டுப்படுத்தவோ, நி்ர்பந்தப்படுத்தவோ முடியாது என்ற சூழலில், தனது கீழ் பணியாற்றும் அரசு பணியாளர்களை, தான் வகிக்கும் அரசு செயலர் என்ற பதவியை வைத்து எதேச்சதிகார தொனியில், வாக்களிக்கத் தவறினால் அரசு பொது விடுமுறையை அனுமதிக்க இயலாது என்பது அதிகார துஷ்பிரயோக செயல். உள்துறை செயலரின் இந்த உத்தரவால் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நடத்தை விதிக்கு எதிரானது: நூறு சதவீதம் வாக்களிப்பதில் எந்தக் கருத்துவேறுபாடும் தலைமைச் செயலக சங்கத்துக்கு இல்லை. ஆனால், அதை ஒரு அதிகார உத்தரவால் செயல்படுத்த நினைப்பதை ஏற்க முடியாது. எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்துறைச் செயலர் வெளியிட்டுள்ள அலுவலக உத்தரவை உடனேயே ரத்து செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக புகார் வந்துள்ளது‘‘ என்றார்.
இந்நிலையில், இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நேற்று மாலை தமிழக உள்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உள்துறை தெரிவித்துள்ளது.