மதுரை: மதுரை மக்களவைத் தேர்தலில் பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படாதது மற்றும் கடும் வெயில் உள்ளிட்டவற்றால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மதுரை மக்களவைத் தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியில் 15,82,271 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,77145 பேர் ஆண் வாக்காளர்கள், 8,04,928 பேர் பெண்கள். 198 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். மதுரை தொகுதி முழுவதும் 1,573 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த தேர்தலில் 9,80,211 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 62.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இது கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் குறைவாகும். கடந்த தேர்தலில் 65.53 சதவீத வாக்குகள் பதிவானது. பேரவைத் தொகுதி வாரியாக மேலூர் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் 67.43 சதவீதம் பதிவாகியுள்ளது. மதுரை மேற்கில் 59.66 சதவீதம், மதுரை மத்தியில் 59.02 சதவீதம், மதுரை தெற்கில் 57.66 சதவீதம், மதுரை வடக்கில் 56.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு குறைவுக்கு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாதது மற்றும் வெயில் ஆகியன முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். இந்த பூத் சிலிப்புகளை கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவர். இந்தத் தேர்தலில் பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படவில்லை.
பூத் சிலிப் கிடைக்காத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் ஊழியர்கள் இருப்பார்கள். இந்தத் தேர்தலில் அவ்வாறு எந்த ஊழியரும் வாக்குச்சாவடியில் இல்லை. இதனால், பூத் சிலிப் இல்லாமல் வந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடியை விட்டு 200 மீட்டருக்கு அப்பால் முகாமிட்டிருந்த அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப் வாங்கி வருமாறு கூறப்பட்டனர். சிலர் பூத் சிலிப் வாங்கி வந்து வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
சில வாக்காளர்கள் செல்போனில் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்து காண்பித்ததை தேர்தல் அலுவலர்கள் ஏற்கவில்லை. அடுத்து வெயில். மதுரையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் காலை 11 மணி வரையும், மாலையில் 4 மணிக்கு மேலும் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வந்தனர். பகல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் இருந்தனர்.
தேர்தலுக்கு முதல் நாள் மேலூர், மதுரை கிழக்கு தொகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்காளர்களுக்கு மட்டும் கட்சிகள் சார்பில் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி காரணமாக பலர் வாக்களிக்க வராமல் இருந்துள்ளனர். இதனால், மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலை விட வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது.