லக்னோ: மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான குன்வர் சர்வேஷ் சிங் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்.19) நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட ராஜஸ்தான் 12, உத்தர பிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா, அசாம், உத்தராகண்ட் தலா 5, பிஹார் 4, மேற்கு வங்கம் 3, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் தலா 2, சத்தீஸ்கர், காஷ்மீர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு, அந்தமானில் தலா ஒரு மக்களவை தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கியவர் குன்வர் சர்வேஷ் சிங் (71). அப்பகுதியில் செல்வாக்கு மிக்க பாஜக பிரமுகராக விளங்கிய இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொண்டையில் இவருக்கு பிரச்சினை இருந்ததாகவும், அதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட குன்வர் சர்வேஷ் சிங் முழுமையாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஏப்.20) உயிரிழந்தார்.
குன்வர் சர்வேஷ் சிங் மறைவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான குன்வர் சர்வேஷ் சிங்கின் மறைவு என்னை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பாஜகவின் குடும்பத்துக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அளிக்க கடவுள் ராமரை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
குன்வர் சர்வேஷ் சிங் மொராதாபாத் தொகுதியில் எம்.பியாக இருந்தவர். அதற்கு முன்பு தாகுர்த்வாரா சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.