புதுச்சேரி: வேண்டுதல் நிறைவேறியதால் வேளாங்கண்ணி மாதா கோயிலில் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஜான்குமார் மொட்டை அடித்து முடியை காணிக்கை செலுத்தினார்.
புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் ஜான்குமார். காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த ஜான்குமார் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஜான்குமார் எம்எல்ஏ இன்று தனது தொகுதி ஆதரவாளர்களுடன் சென்று வேளாங்கண்ணி மாதா கோயிலில் மொட்டை போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் வேண்டுதல் நிறைவேறியதால் மொட்டை போட்டுக்கொண்ட பாஜக எம்எல்ஏ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பற்றி ஜான்குமார் எம்எல்ஏவிடம் கேட்டபோது, “எனது தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் கடந்த 40 ஆண்டுகாலமாக அவதியுற்று வந்தனர். லட்சக்கணக்கில் இழப்பையும் சந்தித்தனர்.
நான் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வாய்க்கால் பணிகளை தொடங்க முயன்றேன். அப்போது இருந்த முதல்வர் நாராயணசாமியும் முயிற்சி செய்தார். ஆனால் எதுவும் செய்யமுடியவில்லை.
இதன் காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வெற்றி பெற்று எம்எஎல்ஏ ஆனேன். பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வாய்க்க்கால் கட்டும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்.
முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் பரிசீலனை செய்து ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தனர். இந்த பணி முடிவடைந்தால் வேளாங்கண்ணி மாதா கோயிக்கு சென்று மொட்டை போட்டுக்கொண்டு முடி காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டேன்.
அதன்படி வாய்க்கால் பணிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முழுமை பெற்றது. இதனால் எனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் 43 பேரை அழைத்துச் சென்று வேளாங்கண்ணி மாதா கோயிலில் மொட்டை போட்டுக்கொண்டு முடி காணிக்கை செலுத்தினேன்.
இதனை கடந்த வாரத்துக்கு முன்பே மக்கள் மத்தியில் நான் அறிவித்திருப்பேன். ஆனால் மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்குக்காகவும், அரசியல் விளம்பரம் தேடுவதற்காகவும் நான் பேசுவதாக மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதனால், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நான் அறிவித்தேன்” என்றார்.
அமைச்சர் பதவி வேண்டி மொட்டை போட்டுக் கொண்டதாக பேசப்படுகிறதே? என்று கேட்டதற்கு, “பாஜக வித்தியாசமான கட்சி. எல்லாமே கட்சி தலைமையில் இருப்பவர்களுக்கு தெரியும். அவர்களாவே எப்போது, யாருக்கு என்ன வேண்டும் என்பது அறிந்து செய்வாளர்கள்” என்றார்.