ஐபிஎல் 2024 சீசன் தீபாவளி சரவெடியாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் அதிரடியும், அமர்களமாகவும் இருப்பதால் பந்துவீச்சாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் 2024 சீசனின் தொடக்கத்தில், 250 ரன்களை எல்லாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், இப்போது 5 முறை 250 ரன்களுக்கும் மேலாக எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியும் 300 ரன்கள் எடுத்தால், யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். அந்தளவுக்கு பேட்ஸ்மேன்களில் ஆதிக்கம் இருக்கிறது.
ஐபிஎல் 2024 இதுவரை அதிகபட்ச ஸ்கோர்கள்
ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை 5 முறை 250 ரன்களுக்கும் மேல் அடிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, மார்ச் 27, 2024 அன்று விளையாடிய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் எடுத்தது. இதற்குப் பிறகு, ஏப்ரல் 3, 2024 அன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 272 ரன்கள் எடுத்தது. ஏப்ரல் 15, 2024 அன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் ஆர்சிபி அணிக்கு எதிராக 287 ரன்கள் எடுத்தது. அதேபோட்டியில் சேஸிங் ஆடிய ஆர்சிபி அணியும் 262 ரன்கள் விளாசியது. இப்போது மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரில் இதுவரை 250 ரன்கள்
ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்பு 2008 முதல் 2023 வரை, 250 ரன்கள் என்பது இரண்டு போட்டிகளில் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. 23 ஏப்ரல் 2013 அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 263 ரன்கள் எடுத்தது. பின்னர் ஏப்ரல் 28, 2023 அன்று, லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 257 ரன்கள் எடுத்தது. ஆனால், ஐபிஎல் 2024ல், மட்டும் இந்த சாதனைகள் எல்லாம் 5 முறை முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் 2024ல் பவர் பிளே ஹீரோ யார்?
ஐபிஎல் 2024 சீசனில் இதுரை ஹிட்மேன் ரோஹித் சர்மா பவர் பிளேயில் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார். ரோஹித் சர்மா இந்த ஆண்டு பவர் பிளேயில் 180 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இரண்டாம் இடத்தில் உள்ளார். டிராவிஸ் ஹெட் இந்த ஆண்டு பவர் பிளேயில் 208.43 ஸ்டிரைக் ரேட்டில் 173 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி இந்த ஆண்டு பவர் பிளேயில் 166 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 145.61.
டெத் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தும் தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு டெத் ஓவர்களில் 14 சிக்ஸர்களை விளாசியிருக்கும் னேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 137 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் புரன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு டெத் ஓவர்களில் 11 சிக்ஸர்களின் உதவியுடன் 129 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாம் இடத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் ஹென்ரிக் கிளாசன் இருக்கிறார். அவர் 11 சிக்ஸர்களின் உதவியுடன் இந்த ஆண்டு டெத் ஓவர்களில் 107 ரன்கள் விளாசியுள்ளார்.