மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, புதிய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை அரங்கத்தின் நிறம், ஊழியர்களின் சீருடை, ஐ.ஆர்.சி.டி.சி-யின் செயலி, வந்தே பாரத் ரயில்கள் எனத் தொடர்ந்து காவிமயமாக்கலில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் செய்தி சேனலான தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி, டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையானது.
அதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் ‘தி கேரளா ஸ்டோரி’ ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மாநிலத்திற்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி படத்தை ஒளிபரப்பக் கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதையும் மீறி படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில், டிடி நியூஸின் லோகோ நிறம் சிகப்பிலிருந்து ‘காவி’ நிறமாக மாற்றப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில்,“நாடு முழுவதும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தூர்தர்ஷன் லோகோ திடீரென காவி நிறத்துக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது. இந்த நடவடிக்கை, தேசிய பொது ஒளிபரப்பாளரின் பா.ஜ.க சார்பு பற்றி உரக்கப் பேசுகிறது.
தேர்தல் நேரத்தில் இத்தகைய காவி சார்பு தேர்தல் நடத்தை விதிமீறலைத் தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? தேர்தல் ஆணையம் இதை உடனடியாகத் தடுத்து, தூர்தர்ஷன் லோகோவை மீண்டும் பழைய நிறத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்,“உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம்பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ.க சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை.
இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரசார் பாரதியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் திவேதி,“பிரகாசமான நிறங்களை லோகோவில் பயன்படுத்துவது வியாபார உத்திக்காக மட்டுமே, அதில் அரசியல் தொடர்பு இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.