பிரச்சார் பாரதி தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

சென்னை: பிரச்சார் பாரதி தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்துத்துவ மதவாத கோட்பாட்டை மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அரசுத் துறைகளில் திணித்து வருகிறது. 18-வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு மிக வேகமாக அரசு துறைகளின் மூலம் பிரச்சாரம் செய்வதற்கும் பாஜக அரசு துணிந்து விட்டது.

இதன் ஒரு பகுதியாகதான் இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி, தனது தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்திற்கு மாற்றி இருக்கிறது. ஏற்கெனவே சிவப்பு நிறத்தில் இருந்ததை காவி வண்ணத்தில் மாற்றியதன் மூலம் மக்களவைத் தேர்தலில் மறைமுகமாக அல்ல நேரடியாகவே அரசு பொதுத்துறை நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முனைந்திருக்கிறது.

இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியின் விளக்கம் ஏற்புடையதல்ல. ஜி -20 மாநாடு நடைபெற்ற போது அதன் லோகோவையும் காவி நிறத்தில் தான் பாஜக அரசு இடம் பெறச் செய்திருந்தது.

தற்போது அதே போல பிரச்சார் பாரதியின் தொலைக்காட்சி இலச்சினையையும் காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையம் இறையாண்மையுள்ளதாக பாரபட்சம் இன்றி செயல்படுமானால் உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.