டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபானக் கொள்கைஊழல் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக சிறையிலிருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. கைதுசெய்யப்பட்டதிலிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளார். இது மிகவும் கவலையளிக்கிறது. அவரை சிறையில் அடைத்து, அவரது உடல்நிலையை பா.ஜ.க ஆபத்தில் ஆழ்த்துகிறது.” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் திகார் சிறைக்கு வெளியே இன்சுலின் ஊசியோடு போராட்டம் நடத்தினர்.
அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, “கடந்த 20 நாள்களாக அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். 30 வருடங்களாக சர்க்கரை நோயாளியான அவருக்கு தற்போது, சர்க்கரையின் அளவு 300-ஐ தாண்டியிருக்கிறது. உலகில் எந்த மருத்துவரிடம் கேட்டாலும், இன்சுலின் இல்லாமல் 300-க்கு மேல் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள்.
ஆனால், பா.ஜ.கவின் வழிகாட்டுதலின்படி திகார் நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுத்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை…” எனப் பேசினார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், “அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300-ஐ தாண்டிவிட்டது. ஆனாலும் பா.ஜ.க மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க அறிவுறுத்தலின்படி, திகார் நிர்வாகம் அவருக்கு இன்சுலின் கொடுக்க மறுக்கிறது.
திகார் நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க முடியாதபோது, டெல்லி மக்களே தங்கள் முதலமைச்சருக்கு இன்சுலின் கொடுக்க முயன்றனர். ஆனால், போலீசார் அதையும் எடுக்க மறுத்துவிட்டனர். இது கெஜ்ரிவாலை கொல்ல செய்யப்படும் சதியல்லாமல் வேறு என்ன?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து விளக்கமளித்த திகார் நிர்வாகம், “டெல்லி முதல்வருக்கு மருத்துவ வசதிகள் இருக்கிறது. நீரிழிவு நிபுணரைக் கேட்டு எய்ம்ஸுக்கு மருந்து எழுதப்படுகிறது. அதன்படியே சிகிச்சை அளிக்கிக்கபடுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கிடையே ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மியில் இருந்து கலந்துகொண்ட கெஜ்ரிவால் மனைவி சுனிதா, “கெஜ்ரிவால் சாப்பிடும் போதுகூட கேமராக்கள் படம் பிடிக்கின்றன. உணவில் கை வைத்தாலே அதிகாரிகள் அவரை கண்காணிக்கிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது. அவர் சுகர் நோயாளி.. கடந்த 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக்கொள்கிறார்.
ஆனால் சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது. டெல்லி முதலமைச்சரைக் கொல்ல பார்க்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்குப் பெயர் தான் சர்வாதிகாரம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.