பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக டி.கே.சிவகுமார் ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது டி.கே.சிவகுமார் பேசுகையில், “காவிரி நீர், நல்ல சாலை வசதி, வீடுகளுக்கு `ஏ’ பட்டா எல்லாம் என் துறைக்கு கீழே தான் வருகிறது. நீங்கள் என் தம்பியை ஜெயிக்க வைத்தால், நான் உங்களுக்கு காவிரி நீருக்கு ஏற்பாடு செய்கிறேன்”என பேசினார். இந்தப் பேச்சு வைரலானது. அவர் வாக்காளர்களை மிரட்டுவதாக பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். பாஜக அளித்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு போலீஸாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகுமார் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களை மிரட்டியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.