சென்னை: நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: மகாவீரரின் அகிம்சை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற கொள்கைகள் மனித குலத்துக்கு உத்வேகத்தின் நித்திய ஆதாரமாக விளங்குகின்றன. மகாவீர் ஜெயந்தியின் விசேஷமிக்க இனிய தருணத்தில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். சமுதாயத்தில் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை பரப்பவும், தேசத்தின் வளர்ச்சிக்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் நம்மை அர்ப்பணிப்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: பிஹார் தலைநகர் பாட்னா அருகில் அரசகுடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சை நெறியை உலகுக்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும்ஜைன சமுதாய மக்கள் அனைவருக் கும் எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டி வாழ வேண்டும் என்கிற அறநெறியைப் பரப்பிய மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண, சமய மக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள். இந்த இனிய நாளில், அமைதிக்கு வழிவகுக்கும் மகாவீரரின் போதனைகளை மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் வாழ்க்கையை மேற்கொள்ள உறுதி ஏற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வி.கே.சசிகலா: மகாவீரர் வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டு. அறநெறியையும், ஆன்மிக நெறியையும் தவறாது பின்பற்றிய மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.