நெருங்கி வந்து வெற்றிக் கோட்டைத் தொட முடியாததுதான் இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் தனக்காக செட் செய்து வைத்துள்ள டிரெண்ட்.
ரன்னர் அப்பாக கடந்தாண்டை முடித்த குஜராத்துக்கு இந்த சீசன் அத்தனை சிறப்பானதாக இல்லை. ஏழில் மூன்றில் மட்டுமே வெற்றி என்பதைத் தாண்டி, கில், சாய் சுதர்சனைத் தவிர்த்து மொத்த பேட்டிங் யூனிட்டும் சொதப்புவது, ஷமி இடத்தை நிரப்ப முடியாததால் ஜொலிக்காத பவர்பிளே பௌலிங் எனப் பலவும் பலவீனங்களாகி அவர்களுக்குப் பின்னடைவைத் தந்தன. போதாக்குறைக்கு டெல்லியுடனான படுதோல்வியும், மோசமான ரன்ரேட்டும் புயல் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தன. ஆர்சிபியுடன் தோற்ற ஒரே அணியான பஞ்சாப்புக்கோ கேப்டன் தவான் ஆட முடியாதது, மிடில் மற்றும் லோயர் ஆர்டர் மட்டுமே ரன் சேர்ப்பது என எல்லாமே சேர்ந்துதான் ஹாட்ரிக் தோல்வியைப் பரிசளித்திருந்தன. டாஸை வென்றது கூட சாம் கரணுக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
பவர்பிளேயில் சொதப்புவதை மட்டுமே பார்ட் டைம் வேலையாக இந்தாண்டு பஞ்சாப்பின் டாப் ஆர்டர் செய்து கொண்டிருந்தது. இந்தப் போட்டியிலோ பவர்பிளேயில் மட்டுமே ரன்கள் வந்து சேர்ந்திருந்தன. ஒமர்சாய் வீசிய முதல் ஓவரில் பந்து ஸ்விங்கைக் கண்டறிய, ஓப்பனர்களின் பேட்களால் ரன்களைக் கண்டறிய முடியவில்லை. இருப்பினும் பிரப்சிம்ரன், சந்தீப் வாரியரை அட்டாக் செய்ய அந்த ஓவரில் 21 ரன்கள் வந்தன. போட்டியில் வீசப்பட்ட ஒரே காஸ்ட்லி ஓவர் இது மட்டுமே. முதல் ஐந்து ஓவர்களில் 45 ரன்களை விக்கெட் இழப்பின்றி கொண்டு வந்தது இந்த இணை. இத்தொடரில் பஞ்சாப் ஓப்பனர்கள் 50+ பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தது இது இரண்டாவது முறை மட்டுமே.
பஞ்சராக இருந்த பவர்பிளேவையே சரிசெய்தாகி விட்டது, மிடில் ஆர்டரும், லோயர் ஆர்டரும் இணைந்து கடமையாற்றும் என்று பஞ்சாப் தரப்பு மூச்சுவிட, கில்லின் அடுத்தடுத்த நகர்வுகள் பஞ்சாப்பை இறுக்கிப் பிடித்து மீள விடவில்லை. பவர்பிளேவுக்குள் மோஹித்துக்குக் கொடுக்கப்பட்ட இரண்டாவது ஓவர் பிரப்சிம்ரனை வெளியேற்றியது. அவரது பந்துகளின் ஹார்ட் லெந்தும் ஸ்விங்கும் இணைந்து குஜராத்துக்கான முதல் திருப்புமுனையைக் கொண்டு வந்தது. கொஞ்சமும் தாமதிக்காமல் கில் இருபுறமும் ஸ்பின்னை வைத்து அட்டாக் செய்யத் தொடங்கினார். மிடில் ஓவர்கள் மொத்தமும் ரஷித் கான், நூர் அஹ்மத், சாய் கிஷோர் மூவரையும் வைத்து நெருக்கடி கொடுக்க, டோமினோஸ் விளையாட்டில் அடுத்தடுத்து சரியும் கார்டுகள் போல வரிசையாக விக்கெட்டுக்களை பறிகொடுத்தது பஞ்சாப்.
மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சாம் கரண், சமீபத்தில் ஓப்பனர் அவதாரம் எடுத்திருந்தார். கடந்த போட்டி போல் இதிலும் அந்த முடிவு சரியாக நகரவில்லை. 19 பந்துகளில் வெறும் 20 ரன்களை மட்டுமே சாம் கரணால் எடுக்க முடிந்தது. டி20 உலகக்கோப்பையில் தனக்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஜுரேல், தொடர்ந்து சொதப்பி வரும் லிவிங்ஸ்டோன் என யாராலும் வீழ்ச்சிக்கு முட்டுக்கட்டை இட முடியவில்லை. 2023-க்கு பிற்பட்ட காலகட்டத்தில் ஐபிஎல்லில் ஸ்பின்னுக்கு எதிரான லிவிங்ஸ்டோனின் ஸ்ட்ரைக்ரேட் வெறும் 95 மட்டுமே. இப்போட்டியிலும் அதுவே அவருக்குக் குழிபறித்தது. நூரின் கூக்ளி அவரை ஏமாற்றியது. இது ஒன்றும் பஞ்சாப்புக்குப் புதிதானதல்ல, இந்த சீசனில் பல போட்டிகளில் ஷசாங்க், அஷுதோஷ் இருவரும்தான் அணியைத் தாங்கிப் பிடித்திருந்தனர். ஆனால் இப்போட்டியில் அவர்களால்கூட மீட்க முடியவில்லை.
51/0 என இருந்த பஞ்சாப்பின் ஸ்கோர் போர்டு 142-க்கு ஆல் அவுட் காட்டியது. 100 ரன்களைக்கூட மீதமிருந்த கூட்டணிகளால் சேர்க்க முடியவில்லை. ஏனென்றால் 144 தடை உத்தரவு இட்டது போல் கூட்டணி சேரவே குஜராத் பௌலர்கள் அனுமதிக்கவில்லை, உருவாக உருவாக தகர்த்துக் கொண்டிருந்தனர். சாம் கரண் – பிரப்சிம்ரனுக்கு அடுத்தபடியாக ஹர்ப்ரீத் பிரார் – ஹர்ப்ரீத் சிங் ஜோடி சேர்த்த 40 ரன்கள் இல்லையென்றால் 100-க்குக் கீழே சுருண்டு விடும் அபாயம் இருந்தது என்பதே உண்மை.
ஸ்லோ பிட்ச் ஓரளவு கைகொடுத்ததுதான் என்றாலும் குஜராத்தின் ஸ்பின் யூனிட் மொத்தமும் ஓவர் டைம் பார்த்திருந்தது. ஸ்பின் பந்துகள் எடுபட்டதால் ஷாருக்கானுக்குக்கூட ஒரு ஓவரினை கில் கொடுத்திருந்தார்.
முன்னதாக இந்த சீசனில் இந்தக் களத்தில் நடந்த போட்டிகளில் 47 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்திருக்க, ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தனர். இந்தப் போட்டியிலோ 13 ஓவர்களுக்கு சுழல்பந்து வீச்சாளர்களை கில் பயன்படுத்தி இருந்தார். அதில் 75 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்க, ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். குறிப்பாக சாய் கிஷோர் தனது நான்கு விக்கெட் ஹாலினைப் பதிவு செய்திருந்தார். ஷசாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரையுமே சாய் கிஷோர்தான் வெளியேற்றி இருந்தார். ஷசாங்க் இறங்கி வருவதைப் பார்த்து பந்தின் வேகத்தைக் குறைத்தது, ஃப்ளைட்டினால் ஏமாற்றியது, அடிக்கவே இடம் தராதவாறு டைட் லைன் அண்ட் லெந்தில் வீசியது என அடிப்படைகளை மிகச் சரியாகவே செய்தார். 143 என்பது குறைவான ஸ்கோராக இருந்தாலும் பஞ்சாப்பின் பௌலிங் யூனிட் அத்தனை சுலபமாக விட்டுக் கொடுக்கவில்லை. போட்டியை இறுதி ஓவர் வரை இழுத்துச் சென்றது.
குஜராத் இந்தப் போட்டிக்கு முன்பாக கிட்டத்தட்ட 1000 ரன்களை அடித்திருந்தது. இதில் சரிபாதி கில் மற்றும் சாய் சுதர்சனின் பேட்டில் இருந்து வந்த ரன்கள்தான். இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. அர்ஷ்தீப் வீசிய ஷார்ட் ஆஃப் லெந்த் டெலிவரியில் புல் ஷாட் ஆட முயன்று மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து சாஹா வெளியேறினார். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் எதிர்பார்த்த பெரிய ஸ்கோர் வரவில்லை. 44 ரன்களை மட்டுமே பவர்பிளே பார்த்தது. 100-க்கும் கீழே இருந்த சாய் சுதர்சனின் ஸ்ட்ரைக்ரேட் முக்கிய காரணமாக கியரை மாற்றி ஆட்டத்தை முடுக்கும் முயற்சியில் குஜராத் ஈடுபடவில்லை. தங்களது ரன்ரேட்டை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவாவது அட்டாக்கிங் மோடுக்கு மாறி இருக்கலாம். அதை செய்யத் தவறியதால் குஜராத் பத்து ஓவர்கள் கடந்த நிலையில் கூட 68 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
பஞ்சாப்புக்கோ போட்டியை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள சில விக்கெட்டுகள் தேவைப்பட்டன. அதனை மிக நேர்த்தியாக லிவிங்ஸ்டன் செய்து இருந்தார். சுப்மன் கில் – சாய் சுதர்சனின் கூட்டணியை முறித்தது மட்டுமல்ல, ஆபத்தான மில்லரையும் வெளியேற்றி சின்னதாக ஒரு நம்பிக்கை ஒளியை பஞ்சாப் கூடாரத்தில் கொண்டு வந்தார். 4.8 என்னும் எக்கானமியும் எந்தளவு குஜராத்துக்கு நெருக்கடி கொடுத்தார் என்பதைக் காட்டியது. தேவைப்படும் ரன்களுக்கான ரேட் 6-க்குக் கீழே இறங்காமல் இருந்ததற்கு அவரது பந்துவீச்சும் முக்கிய காரணம்.
கில்லின் விக்கெட்டுக்குப் பின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை குஜராத் இழந்திருந்தாலும் திவேதியாவின் கேமியோ குஜராத்தை இலக்கை எட்ட வைத்தது.
நெருங்கி வந்து வெற்றிக் கோட்டைத் தொட முடியாததுதான் இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் தனக்காக செட் செய்து வைத்துள்ள டிரெண்ட். இந்தப் போட்டியிலும் இன்னமும் 20 – 30 ரன்கள் அவர்களுக்கான ஒரு வாய்ப்பினை உண்டாக்கி இருக்கும். அதை செய்யத் தவறியதால் தோல்வி தவிர்க்கப்படவில்லை. இந்த சீசனில் பஞ்சாப்பின் ஹோம் கிரவுண்டு பரிதாபம் தொடர்கிறது.
புள்ளிக் கணக்கில் இரண்டு ஏறியது, ஆறாவது இடத்திற்கும் முன்னேற்றி விட்டோம் என உற்சாகம் கொண்டாலும், ஸ்பின் பௌலிங் ஆதிக்கம் செலுத்தியது என ஆறுதல்பட்டுக் கொண்டாலும் கில் மற்றும் சாய் சுதர்சன் என்னும் இரு சக்கரங்களிலேயே குஜராத்தின் தேர் நகர்வது குடை சாய்வது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் பேட்டிங் அணுகுமுறையையும் மாற்றியே ஆக வேண்டும் என்பதையுமே சொல்லாமல் சொல்லிவிட்டன.