"இது எங்க வீட்டுக் கல்யாணங்க!" – ஷங்கரின் மாப்பிள்ளை குறித்து நெகிழும் நடிகை நளினி

இந்தியாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கடந்தவாரம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சினிமா துறையைச் சேர்ந்த தருண் கார்த்திகேயன் என்பவரைக் கரம் பிடித்திருக்கிறார்.

முன்னதாக, இயக்குநர் ஷங்கரின் மருமகன் அவரின் உதவி இயக்குநர் என்று செய்திகள் பரவிய நிலையில், அவர் சினிமாவில்தான் இருக்கிறார், ஆனால் ஷங்கரின் உதவி இயக்குநர் இல்லை என்று தெரிவித்தனர். இப்படி ஷங்கரின் மருமகன் யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவிவந்தன.

ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன்

உண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த தருண் கார்த்திகேயன், தற்போது இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறார் என்றும் நடிகை நளினியின் உறவினர் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் தருண் கார்த்திகேயன் குறித்து நடிகை நளினியிடமே பேசினேன்…

“தருண் எனக்கு மகன்தான். அதாவது, என் சித்தியோட பேரன் (அம்மாவோட தங்கை). இது எங்க வீட்டுக் கல்யாணம். எங்க குடும்பத்திலிருந்து எல்லோருமே போனோம். அதனாலதான், கல்யாண போட்டோக்களில் பல இடத்துல நான் இருப்பேன். தருண், எங்க எல்லோருக்குமே செல்லப்பிள்ளை. ரொம்ப சமத்து. ரொம்ப தங்கமான பையன். இந்தச் சம்பந்தம் அமைஞ்சதுல எல்லோருக்குமே சந்தோஷம்.

திருமணத்தில் நளினி

ஷங்கர் சார் இந்தியாவோட பெரிய இயக்குநர். அவ்ளோ பெரிய இயக்குநரா இருந்தாலும் அப்படியொரு மரியாதையான மனிதரைப் பார்க்கவே முடியாது. எல்லோர்க்கிட்டேயுமே மரியாதையா நடந்துப்பாரு. அவர்கிட்ட பிடிச்சதே, பிரமாண்ட இயக்குநர்ன்னு பேர் வாங்கினாலும், அவர்கிட்ட இருக்கிற எளிமைதான். அப்படியொரு சிம்ப்ளிசிட்டி! திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரையும் பணிவா உபசரித்தார். தருணும் ஐஸ்வர்யாவும் இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா போறாங்க. அவங்களோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். எங்க எல்லோருடைய ஆசீர்வாதமும் வாழ்த்தும் அவங்களுக்கு எப்பவும் இருக்கும்!” என்கிறார் பூரிப்போடு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.