2024 மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை பா.ஜ.க-வும், 400-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெறும் என்று தொடக்கத்தில் பேசியவந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவரது பேச்சில் தற்போது மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. தனது பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்காமல், மதரீதியிலான உணர்வைத் தூண்டும் வகையில் அவர் பிரசாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார்.
மேலும், ‘பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’ என்றார் மோடி. இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என சாடுகிறார்கள் எதிர்க்கட்சி தலைவர்கள்.
இத்தகைய பேச்சுகள் மூலமாக, ‘பா.ஜ.க 370 தொகுதிகளில் வெற்றிபெறும்’ என்று பேசிவந்த பிரதமர் மோடிக்கு, அவ்வளவு தொகுதிகளெல்லாம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறாரோ என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்பாகவும், இதேபோன்ற மத ரீதியான வெறுப்பு கருத்துக்களை பிரதமர் மோடி தனது பரப்புரையில் வெளிப்படுத்தினார். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள், விருப்பங்கள் ஆகியவற்றிலிருந்து இன்றைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதை, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை நிரூபித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது’ என்றார்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. ‘நியாயப் பத்திரம்’ என்ற தலைப்பில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக – பொருளாதார கணக்கெடுப்பு ஆகியவை நடத்தப்படும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரிவு அரசுப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் ஆகியவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வாக்குறுதிகள்.
தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இடபிள்யூஎஸ், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு பிணையின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற பகுதியினருக்கானவை. இந்த வாக்குறுதிகளைப் பற்றி எதுவும் பேசாத பிரதமர், இதை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்துவதன் நோக்கம் குறித்து அப்போதே கேள்விகள் எழுந்தன. எனினும் வழக்கம் போல், முந்தைய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல், அடுத்த குற்றச்சாட்டை நோக்கி சென்று விட்டார்.
இது குறித்து ‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சுப்பிரமணி ஆறுமுகத்திடம் பேசினோம். “பா.ஜக ஆட்சியின் பத்தாண்டுகால சாதனைகளைப் பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. மாறாக, மத ரீதியிலான வெறுப்புப் பேச்சுகளைத்தான் பேசிவருகிறார். ‘ராமர் கோயில் திறப்பு விழாவில் எதிர்க்கட்சியினர் கலந்துகொள்ளவில்லை. அதன் மூலம், பெரும்பான்மை இந்துக்களை அவர்கள் அவமதித்துவிட்டார்கள்’ என்று பிரதமர் பேசுகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில் புல்வாமா விவகாரத்தை முன்வைத்து பிரசாரம் செய்தார் பிரதமர். இந்த முறை பிரசாரத்தில் முன்வைப்பதற்கு பா.ஜ.க-வுக்கு சாதகமாக எதுவும் இல்லை. எனவே, காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு மத ரீதியில் முத்திரை குத்துகிறார்கள். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாமல், அதை முஸ்லீம் அறிக்கை என்று பிரதமர் ஏன் முத்திரை குத்துகிறார்? இது அப்பட்டமான வெறுப்பு பேச்சு. பிரதமர் என்ற பதவிக்கான கண்ணியத்தை இதற்கு முன்பு யாரும் குறைத்தது கிடையாது. இது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல். எனவே, இது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs