இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளபப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.
அப்பதிவில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இதன்போது இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது.
அத்துடன், நீர்த்துறையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமையும் இப்புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்தோம்.
சுத்தமான மற்றும் சுகாதார பாதுகாப்புடன் கூடிய குடிநீரை தடையின்றி வழங்குதல், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அதேவேளை மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டன.
தொழில்சார் ஊழியர்களை உருவாக்கும் நோக்கில் தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்தல், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உட்பட சிறார்களுக்கான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுதல் உட்பட சமூக முன்னேற்றத்துக்காக வகுக்கப்பட்டுள்ள வியூகங்கள் பற்றியும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தனது முகப்புத்தகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.