கொல்கத்தா: “இண்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம்” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு தரும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.” என்று அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “நீதித் துறையில் தங்களின் செல்வாக்கை பாஜக பயன்படுத்துகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது சட்ட விரோதமானது. வேலை இழந்த மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று பேசினார்.
முன்னதாக, மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (West Bengal School Service Commission – WBSCC) அமைக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு (2016 recruitment panel) செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.