புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா நகரில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியாவில் வேலையின்மையும் பணவீக்கமும் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், எல்லாம் சரியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக அவர் (மோடி) பல்வேறு புதிய தொழில்நுட்பங் களை வைத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறும்போது, “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கிவிடும் என பிரதமர் மோடி கூறுகிறார். நாட்டில் உள்ள சுமார் 20 கோடி (முஸ்லிம்கள்) மக்கள் அவருக்கு ஒரு பொருட்டு இல்லையா? அரசியல் மிகவும் கீழ்த்தரமான அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவர் மீது தேர்தல் ஆணையம் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்றார்.
“வரும் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே பிரதமர் மோடி இவ்வாறு பேசுகிறார்” என சிவசேனா (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுபோல, பாபாசாஹிப் அம்பேத்கரின் அரசியல் சாச னத்தை அழிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.