மேற்கு வங்கம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பினால் 24,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர்களின் பணியிடங்கள் பறிபோயிருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 24,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் ஓர் ஆசிரியர் நியமனக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கென தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை சுமார் 23 லட்சம் பேர் எழுதினர். அதில், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 24,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றிவந்தனர். அந்த நிலையில், மேற்கு வங்க அரசின் ஆசிரியர் பணியிட நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போதைய கல்வித் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.
குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், பலர் தேர்வே எழுதாமல் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை பெற்றிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி அபிஜித் கங்குலி, ஆசிரியர் பணியிட நியமன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். (தற்போது, ஓய்வு பெற்றிருக்கும் நீதிபதி அபிஜித் கங்குலி பா.ஜ.கவில் இணைந்து, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்).
நீதிமன்ற உத்தரவையடுத்து தனியாக வழக்குப் பதிந்த சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது. கல்வித் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களில் ரெய்டு நடத்தியது. இந்த சோதனையில் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், அது ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக வாங்கப்பட்ட லஞ்சப் பணம் என்றும் சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி மற்றும் அடுத்தடுத்து சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின்மீதான இறுதிகட்ட விசாரணை கடந்த மார்ச் 20-ம் தேதி நடந்து முடிந்து, தீர்ப்பு தேதி ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசாக், ஷபார் ரஷிதி அடங்கிய அமர்வு, “மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆசிரியர் நியமனக் குழு செல்லாது. இந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணி நியமயங்களும் ரத்து செய்யப்படுகிறது” என அதிரடியாக அறிவித்தது. மேலும், “முறைகேடான முறையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பணி நியமனம் பெற்ற 2016-ம் ஆண்டு முதல் இதுவரையில் பெற்ற அரசு சம்பளத்தை 12% வட்டியுடன் நான்கு வாரத்துக்குள் திருப்பி அளிக்க வேண்டும்” எனவும் கிடுக்கிப்பிடி உத்தரவு போட்டிருக்கிறது. இதனால், 24,000 பேரின் அரசுப் பணிகள் கொல்கத்தா நீதிமன்றத்தின் ஒற்றைத் தீர்ப்பின்மூலம் அதிரடியாக பறிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, ஆசிரியர் பணிநியமனம் தொடர்பான வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதோடு, மேற்கொண்டு சிபிஐ விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பு மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.