ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மின்கம்பங்கள் சாய்ந்து 18 நாட்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் மின் இணைப்பு தடைபட்டு, 30 ஏக்கர் இறவை பாசன நெற்பயிர்கள் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமியாபுரம் வருவாய் கிராமத்தில் களத்தூர் கண்மாய் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் மழை பெய்த போது பூலா ஓடை அருகே இருந்த 3 மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள 30 விவசாயக் கிணறுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சில நாட்களில் ஒரு பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மின்கம்பம் சரி செய்யப்படாததால் 6 விவசாய கிணறுகளுக்கு 20 நாட்களுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் கிணற்றில் நீர் இருந்தும் 30 ஏக்கர் நெல் வயல்கள் நீரின்றி வறண்டு நெற்பயிர்கள் முழுவதும் வீணானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”20 நாட்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில் மின் கம்பம் சாய்ந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய மின்கம்பம் மாற்றி தருகிறோம் என கூறிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட 30 ஏக்கர் நெற்பயிர்கள் நீர் இல்லாமல் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
முதல் போக சாகுபடியில் அறுவடை நேரத்தில் மழை பெய்ததால், மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை இரண்டாம் போக சாகுபடியில் சரிசெய்து விடலாம் என நெல் பயிரிட்ட நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால், நெற்பயிர்கள் முளையிலேயே கருகி, உணவுக்கே அரிசியை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்” என்றனர்.