ரஜினியின் 171வது படமான `கூலி’ படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தின் டீசரில், ரெட்ரோ விஷயங்கள் பல கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ரஜினி பேசும் வசனங்கள்… இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக கைத்தட்டலை அள்ளுகிறது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வரும் ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளாக வரும் ‘அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், போனார்கள்…’ வரிகளை இதற்குப் பயன்படுத்தியிருந்தார்கள். இதே வரிகளை ‘ரங்கா’ படத்திலும் பன்ச் வசனமாகப் பேசியிருப்பார் ரஜினி. இந்த வசனத்தைத்தான் ‘கூலி’ டீசரில் ரீ-கிரியேட் செய்திருக்கிறார் லோகேஷ். அந்த டயலாக்கைப் பேசி முடித்ததும், பின்னணி இசையில் ‘டிஸ்கோ டிஸ்கோ… D.I.S.C.O’ என கோரஸ் ஒலிக்கும்.
1983ல் வெளியான ரஜினி, பூர்ணிமா நடிப்பில் வெளியான ‘தங்க மகன்’ படத்தில் இடம்பெறும் பாடலான ‘வா வா பக்கம் வா…’. பாடலின் இடையே எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனக்கே உரிய ஸ்டைலுடன் பாடியவைதான் இந்த ‘டிஸ்கோ’ வரி. அந்தப் பாடலை எழுதியிருயவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதியவர். ரஜினிக்கும் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். ‘கூலி’ படத்தில் இடம்பெற்ற ‘டிஸ்கோ’ குறித்து முத்துலிங்கத்திடம் பேசினேன்.
”’கூலி’ படத்தின் டைட்டில் டீசரை இன்னும் பார்க்கல. ஆனால், ‘தங்க மகன்’ படத்தில் வரும் அந்தப் பாடலை எழுதியிருக்கேன். இயக்குநர் ஏ.ஜெகந்நாதன், இளையராஜா என எல்லோரும் சிட்சுவேஷனை சொன்னார்கள், உடனே எழுதிவிட்டேன். எஸ்.பி.பி.யும், வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். அந்தப் பாடலின் பீட் வேகத்தில் டிஸ்கோ வார்த்தையை எஸ்.பி.பியே உருவாக்கிப் பாடிவிட்டார். சிட்சுவேஷனுக்கும் அது பொருத்தமாக இருந்ததால் ராஜாவும் அதைப் பாராட்டினார். பாடலில் அப்படியே வைத்துவிட்டார்” என்றார் முத்துலிங்கம்.