கொல்கத்தா: “கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டை உளவு பார்த்த அந்த நபரைச் சந்திக்க அபிஷேக் பானர்ஜி அன்று சம்மதித்திருந்தால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார்.
கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவில் உள்ள துரோகி ஒருவர் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டியிருந்தார். உங்களுக்கு என் மீது வெறுப்பு இருந்தால் என்னை வெடிகுண்டு வீசிக் கொல்லுங்கள். நீங்கள் அபிஷேக்கை கொல்ல முயற்சி செய்தீர்கள். அது எங்களுக்கு முன்கூட்டியேத் தெரிந்துவிட்டது. அவர்கள் அவரது (அபிஷேக் பானர்ஜி) வீட்டை உளவு பார்த்தனர். சந்திப்புக்கான நேரம் கேட்டனர். அப்படி அவர் அந்தச் சந்திப்புக்கு சம்மதித்திருந்தால் அன்று சுடப்பட்டிருப்பார்.
அவர்களுக்கு (பாஜக) எதிராக பேசும் அனைவரையும் அவர்கள் கொலை செய்யவோ அல்லது சிறையில் தள்ளவோ விரும்புகிறார்கள். உங்களால் மக்களின் வாக்குகளை வெல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தால், மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டை உளவு பார்த்தகாக குற்றம்சாட்டி மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவரை கொல்கத்தா போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ராஜாராம் ரேகி என்ற அந்த நபர் மகாராஷ்டிராவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் ,அவர் மும்பை தாக்குதல் குற்றவாளினயான டேவிட் ஹெட்லியை சந்தித்ததாகவும், 26/11 தாக்குதல் போல ஏதோ ஒன்று நடத்த சதி செய்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக தனக்கும், டையமண்ட் ஹார்பர் எம்.பி.யான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக பாஜக சதி செய்வதாக ஞாயிற்றுக்கிழமை மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் மேற்கு வங்க மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மம்தா கேட்டுக்கொண்டார்.
அவர் கூறுகையில், “பாஜகவினர் என்னையும், அபிஷேக்கையும் குறிவைத்துள்ளனர். நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றாலும் பாஜகவின் சதிக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மேற்கு வங்க மக்களுக்கு எதிரான சதிக்கு பலியாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.