உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் 123 ஆண்டுகள் பாரம்பர்யம் உடையது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் ஒரு பெண்கூட துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில்லை. கடைசியாக, 1920-ம் ஆண்டு பேகம் சுல்தான் என்ற பெண், முதன்முறையாக இப்பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு இப்பல்கலைக்கழகத்தில் பெண்கள் யாரும் துணை வேந்தராக நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்போது இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நைமா கதூன் என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு 3 பேர் கொண்ட பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்த கமிட்டிக்கு, துணை வேந்தர் மொகமத் குல்ராஸ் தலைமை தாங்கினார்.
மொகமத், தற்போது துணை வேந்தராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நைமாவின் கணவர். ஜனாதிபதி, நைமாவின் பெயரை தேர்வு செய்து ஒப்புதல் கொடுத்தார். ஒப்புதலை தொடர்ந்து, நைமா கதூனை துணை வேந்தராக நியமித்து கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. அவர் நேற்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சாந்திஸ்ரீ பண்டிட் என்ற பெண், துணை வேந்தராக இருக்கிறார். இதே போன்று, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நஜ்மா அக்தர் இருக்கிறார். தற்போது அலிகர் பல்கலைக்கழகத்திலும் நைமா கதூன் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1988-ம் ஆண்டு நைமா கதூன் அலிகர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து, 2014-ம் ஆண்டு பெண்கள் கல்லூரி முதல்வராகவும், மனநலவியல் துறை தலைவராக பதவியேற்றார். அலிகர் பல்கலைக்கத்திலேயே பி.எச்.டி படிப்பை முடித்த நைனா அமெரிக்கா, துருக்கி போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி கட்டுரைகளையும் தாக்கல் செய்துள்ளார். பத்மபூசன் விருது பெற்ற நைமா எழுத்தாளரும் கூட.