பாலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் நடத்திவரும் போர் ஆறு மாதங்களைக் கடந்துவிட்டது. இஸ்ரேல் படை இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில், 34,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு, போர் நிறுத்தம் வேண்டும் வேண்டும் என்று கூறிக்கொண்டே, இஸ்ரேலுக்கு கூடுதல் நிதியை அமெரிக்க ஒதுக்கியிருக்கிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கான் யூனிஸ் பகுதியில் மருத்துவமனை ஒன்றில், இஸ்ரேலியப் படைகளால் கொன்று புதைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரின் உடல்களை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து கடந்த மூன்று நாள்களாக தோண்டியெடுத்து வருகின்றனர். முன்னதாக, கடந்த பிப்ரவரியில் கான் யூனிஸிலுள்ள மருத்துவமனையில் கடுமையான சண்டை மூண்டதையடுத்து, மார்ச் 26-ம் தேதியன்று இஸ்ரேலிய படைகள் மருத்துவமனையை சுற்றி வளைத்தன.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைக் கட்டடங்களை கட்டளைகள் வழங்கும் மையங்களாக ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தி வந்ததாகவும், கடந்த அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கடத்தப்பட்டவர்களை வைத்திருக்கும் இடமாக மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றசாட்டு வைத்தது. இப்படியிருக்க கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் படைகள் கான் யூனிஸ் மருத்துவமனையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில், மருத்துவமனையிலிருந்து அழுகிய தூர்நாற்றம் வீசியிருக்கிறது.
A mother bids farewell to her son who was found in a mass grave in the courtyards of the Naser hospital in Khan Younis city.
The day to day reality in Palestine pic.twitter.com/CnAFIuSOZq
— عبد (@ABroNextDoor) April 22, 2024
அதையடுத்து அங்கு தோண்டிப் பார்த்த சுகாதாரப் பணியாளர்களுக்கு, குவியல் குவியலாக இருந்த பிணங்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதைத்தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களும், பேரிடர் மீட்பு படையினரும் மேற்கொண்ட பணியில் 210 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களைக் கண்டு கதறி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.