2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.
இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி நகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த செல்வப்பெருந்தகை நம்மிடம் பேசுகையில், “வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறையைவிட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடி 10 ஆண்டுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்ற அவருக்கு மனமில்லை.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவும் வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோல்வி பயம் காரணமாக மதரீதியாக மக்களை பிரித்தாளும் கொள்கையைக் கையில் எடுத்திருக்கிறார். அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் உறவினர்களாக வாழும் இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிதற்றுகிறார். பாசிசத்தை இந்த மண்ணில் விதைக்கும் அவரின் முயற்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.