சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்மோடி மத வெறுப்பு கருத்துகளை பேசியது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர்மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு. வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் தலைவர்களும், நாட்டின் உயர் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல. முஸ்லிம்களின் மனது புண்படும்படி பேசுவதும் ஏற்புடையது அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக, கண்ணியம் தவறிய, மத வெறுப்பு கருத்துகளை யார் பேசினாலும், நாட்டின்இறையாண்மைக்கு எதிரானதாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக ஆதாரமற்ற, விஷமத்தனமான, அவதூறு கருத்துகளை பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளை பிரதமர் மோடி மீறியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: மதம், கடவுள்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது குற்றம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால், முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக நீதிமன்றம், மக்கள் மன்றத்துக்கு செல்ல வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை திரித்து ‘பொதுமக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி போன்ற சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது’ என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு வரும்விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு எதிராகவும், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் அவரது பேச்சு உள்ளது. மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: மத வெறுப்புப் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார். அவரது பேச்சு நாட்டில் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் கசப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து வருகிறார்.இல்லாததையும், பொல்லாததையும் கூறி, நாட்டு மக்களை ஏமாற்றி, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பிரதமர் மோடிக்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நல்லதொரு பாடம் கற்பிப்பார்கள். மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது, மக்கள் நம்பமாட்டார்கள்.