மஞ்சள் அலைகளுக்கு மத்தியில் லக்னோ ஜெர்சி அணிந்த ஒரே ஒரு ரசிகர் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரல்.
சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணி சென்னையை வீழ்த்திய பிறகு நிகழ்ந்த காட்சி அது. லக்னோவுக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக அடையும் இரண்டாவது தோல்வி இது.
மேலும் நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி அடையும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
செயல்படாத பேட்டர்கள்:
சென்னை அணியின் பேட்டிங் லைன் அப்பில் ரஹானேவும் டேரில் மிட்ச்செலும் என்ன செய்கிறார்கள் எனும் கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை. ரஹானே கடந்த சீசனில் மேட்ச் வின்னர். நம்பர் 3 இல் உள்ளே வந்து அவரது கரியரில் இதுவரை ஆடாத வகையில் அதிரடியாக ஆடி அசத்தியிருந்தார். ஆனால், இந்த சீசனில் ரஹானே சொதப்பல்தான். நம்பிக்கையளிக்கும் வகையிலான இன்னிங்ஸ்கள் அவரிடமிருந்து பெரிதாக வரவில்லை. அவரை சௌகரியமாக உணர வைக்க வேண்டும் என்பதற்காக ருத்துராஜ் தன்னுடைய ஆர்டரையே தியாகம் செய்து ரஹானேவை ஓப்பனராக்கினார். ஆனால், தொடக்க வீரராகவும் அவரால் நன்றாக செயல்பட முடியவில்லை. அவருக்காக மூன்றாவது முறையாக ஓப்பனிங் காம்போவையெல்லாம் மாற்றினார்கள். எதுவும் கைகொடுக்கவில்லை.
லக்னோவுக்கு எதிரான போட்டியிலும் ஒரே ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்தார். அதேமாதிரிதான் டேரில் மிட்செலும் மஞ்சள் ஜெர்சியில் இன்னமும் ஒரு உருப்படியான இன்னிங்ஸை அவர் ஆடிக்காட்டவே இல்லை. எவ்வளவு சொதப்பினாலும் அடுத்தடுத்தப் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்து ஃபார்முக்கு கொண்டு வருவதுதான் சென்னை அணியின் பாணி. சென்னை அணி தன் வேலையை இதுவரை சரியாக செய்திருக்கிறது. வாய்ப்புகளை பெறும் பேட்டர்கள் இனியாவது வரவிருக்கும் முக்கியமான போட்டிகளில் சோபிக்க வேண்டும்.
ஜடேஜா ஏன்?
லக்னோவுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் விழுந்திருந்த சமயத்தில் ஜடேஜா நம்பர் 4 இல் இறக்கப்பட்டார். இது முழுக்க முழுக்க தவறான முடிவு. ‘பவர்ப்ளேக்குப் பிறகு எந்த சமயத்தில் விக்கெட் விழுந்தாலும் துபே வரவேண்டும் என்பதுதான் எங்களின் திட்டம். அவர் க்ரீஸூக்குள் வரவேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக நம்மால் விக்கெட்டை விட முடியாது.’ என போட்டிக்குப் பிறகு ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருந்தார். இந்த காரணத்தில் லாஜிக் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில், பவர்ப்ளே முடிவதற்கு 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில்தான் ஜடேஜா க்ரீஸூக்குள் வந்தார். அந்த 4 பந்துகளில் சிவம் துபேவை மறைத்து வைப்பதனால் என்ன நடந்துவிடப் போகிறது. சொல்லப்போனால் ஒன்றுமே நடக்கவில்லை. ஜடேஜா நல்ல டச்சில் இல்லை.
கடுமையாகத் திணறினார். 19 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் வெறும் 84. சிவம் துபேக்கு ஸ்பின்னர்களை வைத்து வீசுவது சிரமமான விஷயம் என்பதால் ஜடேஜா ஆடும்போதே மூன்று, நான்கு ஓவர்களை ஸ்பின்னர்களிடம் கொடுத்து புதிய கணக்கைத் தீட்டினார் கே.எல்.ராகுல். துபே வந்தபிறகு ஸ்பின்னர்களை பயன்படுத்தவே இல்லை. ஜடேஜாவை மேலே ஏற்றி ஆட வைப்பது என்பது சென்னை அணி திடீரென எடுத்திருக்கும் முடிவு. வழக்கமாக இப்படியான பரிச்சார்த்த முயற்சிகளில் சென்னை அணி கவனமே செலுத்தாது. ஆனால், இந்த முறை சென்னை அணியின் குணாதிசயத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது.
போட்டிக்கு முந்தைய நாள் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேசுகையில், `ரச்சின் ரவீந்திராவை பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. அவர் நல்ல பாசிட்டிவாகத்தான் ஆடி வருகிறார். அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸை எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். (Just one innings away from big knock)’ எனப் பேசியிருந்தார். ஆனால், அந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த 24 மணி நேரத்துக்குள் நடக்கும் போட்டியில் ரச்சினுக்கு லெவனில் இடம் இல்லை. ட்ராப் செய்யப்பட்டிருந்தார்.
இப்படியான விஷயங்களை சென்னை அணி செய்யவே செய்யாது. கேப்டன்சி மாற்றத்தின் விளைவா இது என்பது தெரியவில்லை.
சொதப்பல் பௌலிங்; தாறுமாறு ஃபீல்டிங்!
ஸ்டாய்னிஸ் இப்படியொரு இன்னிங்ஸை ஆடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரை சென்னை அணியின் பௌலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஸ்டாய்னிஸ் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிரமப்படக்கூடியவர். ஆனால், ஈரப்பதத்தை காரணம் காட்டி கடைசி 10 ஓவர்களில் ஒரு ஓவரைக் கூட ருத்துராஜ் ஸ்பின்னர்களுக்குக் கொடுக்கவில்லை. 10-15 ஓவர்களில் ஒரு இரண்டு மூன்று ஓவர்களை ஸ்பின்னர்களிடம் கொடுத்து ரிஸ்க் எடுத்திருந்தால் ஸ்டாய்னிஸின் விக்கெட் கிடைத்திருக்கக்கூட அதிக வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், ருத்துராஜ் அதை முயற்சிக்கவே இல்லை. சென்னை அணியின் டெத் பௌலிங்கும் அத்தனை சீராக இல்லை. ஒரு போட்டியில் ஷர்துலும் துஷாரும் அத்தனை நேர்த்தியாக வீசி ஸ்கோரை டிபண்ட் செய்ய உதவுகின்றனர். ப்ராவோ ஆரத்தழுவி கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்.
இன்னொரு போட்டியில் அப்படியே மொத்தமாக சொதப்பிவிடுகின்றனர். பௌலிங்கைத் தாண்டி பீல்டிங்கும் பிரச்னைதான். குறிப்பாக, தீபக் சஹார் நேற்று பவுண்டரி லைனில் நின்று கபடி ஆடிக்கொண்டிருந்தார். அவரே 10-20 ரன்களை பீல்டிங்கில் தவறவிட்டிருப்பார்.
ஒட்டுமொத்தமாக மூன்று டிபார்ட்மெனட்டிலுமே சென்னை அணிக்கு பிரச்சனைகள் இருந்தது. அதுதான் தோல்விக்குக் காரணம்.
சென்னை அணியின் தோல்வியின் காரணமாக நீங்கள் நினைப்பது எது என்பதைக் கமென்ட் செய்யுங்கள்!