அரசாங்கப் பாடசலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொள்கை சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஒரு அதிகாரி விசாரணை நடத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2024.03.28 அன்று அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கிணங்க 2024.04.18 அன்று கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கடிதம் குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான பிரச்சினைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
1994 ஆசிரியர் சேவை ஏற்படுத்தியதுடன் வழங்கப்பட்ட சம்பளப் படிமுறையை 1997 பி. சி. பெரேரா சம்பள ஆணைக்குழு கலைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சம்பளப் முரண்பாடு இன்று வரை வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர்: 2022 ஆரம்ப காலப்பகுதியில் சம்பளப் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அசிரியர்கள் மூன்று மாதங்களாக வீதியில் நடமாடினார்கள். அதனால் உபகுழுவொன்றை நியமித்து அந்த நேரத்திற்கு அவசியமான தீர்வை வழங்கினர்.
இதனால் சம்பளப் பிரச்சினை தீர்ந்தது என்று அர்த்தமல்ல. ஆசிரியர் சம்பளத்தில் தீர்க்கப்பட வேண்டிய பகுதிகள் உள்ளன. கொள்கைக் காரணம் தொடர்பாக அதிகாரியொருவரினால் இது குறித்து விசாரணை செய்ய முடியாது என்ற விடயம் ஆராயப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாட்டில் இன்னும் தீர்க்க வேண்டிய பகுதிகள் உள்ளதாகவும், அப்பிரச்சினைகளை தீர்க்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஆசிரியர் ஈடாக அதிபர், கல்வி நிருவாக, கல்வி ஆலோசனை, ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் எனும் நான்கு சேவைகளிலும் பிரச்சினை உள்ளதாகவும் இது தொடர்பில் குழு அறிக்கை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.