பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார்
கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். இன்றைக்கும் அவரை தெய்வமாக வணங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது மகன்கள் புனித் ராஜ்குமார், சிவராஜ்குமார் அவரது வாரிசுகளாக நடித்து வந்தார்கள். இவர்களில் புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்தார்.
பிறமொழி படங்களில் நடித்திராத ராஜ்குமார் கன்னடத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1942ம் ஆண்டு 'பக்தபிரகலாதா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2000மாவது ஆண்டில் 'சப்தவேதி' படத்துடன் தனது திரைப் பயணத்தை முடிவு செய்தார்.
ராஜ்குமார் நடிகர் மட்டுமல்ல சிறந்த பாடகர். திரைப்படங்களில் 300 பாடல்கள் வரை பாடியுள்ள ராஜ்குமார், 400 பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். நாடகங்களில் பாடி நடித்ததால் அவருக்கு பாடல் கைவந்த கலையாக இருந்தது. 1956ம் ஆண்டு வெளிவந்த 'ஓஹிலேஷ்வரா' என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.
பெரும்பாலும் தனது கேரக்டர்களுக்கு தானே பாடினார். இதனால் அந்த காட்சிகள் இயல்பாக அமைந்தது. 1952ம் ஆண்டு வெளிவந்த 'ஜீவன சைத்ரா' என்ற படத்தி 'நடமாயா' என்ற பாடலை பாடியதற்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். நடிகர், பாடகர், இசை மேதை ராஜ்குமாருக்கு இன்று 95வது பிறந்த நாள்.