தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரசங்கால் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமை காவலர் சங்கர் மற்றும் போலீஸார் ஆனந்தராஜ், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு மதுவிற்பனை செய்துக் கொண்டிருந்த பெருமாள் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிமிருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பெருமாளிடம் வழக்குப்பதிவு செய்யாமலிருக்க 50,000 ரூபாய் மாமூலாக போலீஸார் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெருமாள், மாமூல் கொடுக்கவில்லை. இதையடுத்து பெருமாளை சரமாரியாகத் தாக்கிய போலீஸார், அவரிடமிருந்த பணம் மற்றும் மதுபானங்களையும் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. போலீஸாரின் தாக்குதலில் காயமடைந்த பெருமாள், படப்பை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து பெருமாள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மணிமங்கலம் போலீஸார் விசாரித்தனர். அப்போது பெருமாள், கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றது தொடர்பாக எந்த ரிப்போர்ட்டும் காவல் நிலையத்தில் இல்லை.
அதனால் பெருமாளை விசாரித்த காவலர்கள் மூன்று பேரை அழைத்து உயரதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் பெருமாள் குற்றம்சாட்டியதைப் போல மூன்று காவலர்களும் பணம் கேட்டு மிரட்டியது உண்மையெனத் தெரியவந்தது. இதையடுத்து மணிமங்கலம் போலீஸ் அதிகாரிகள் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் விசாரித்து தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்தார். அதனடிப்படையில் தலைமை காவலர் சங்கர் காவலர்கள் ஆனந்தராஜ், கணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து தாம்பரம் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்கள் மீதும் ஏற்கெனவே சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அவர்களை மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணி வழங்காமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணி வழங்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருந்ததால் இவர்கள் காவல் நிலைய பணியிலிருந்திருக்கிறார்கள். அப்போதுதான் கள்ளச் சந்தையில் மது விற்பது தொடர்பாக தகவல் கிடைத்து அங்குச் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதோடு மது விற்றவரை தாக்கியும் இருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்கள், மளிகை கடை ஒன்றில் போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அதை விற்று அந்தப் பணத்தை சுவாகா செய்த குற்றச்சாட்டில் சிக்கியவர்கள். அதனால்தான் இந்த சம்பவத்தில் மூன்று பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் தவறு செய்யும் காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி சிலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.