நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் வரை `இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்து சென்றுவிடும், நிலையான ஆட்சிக்கு பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்’ என மோடி கூறிவந்தார். இந்தியா கூட்டணியும், `தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணியில் ஜனநாயக முறையில் பிரதமரைத் தேர்ந்தெடுப்போம்’ என்று கூறிவந்தது.
தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிரசாரத்தில் அதற்கு நேரெதிராக கடந்த நான்கு நாள்களாக இஸ்லாமிய வெறுப்பு பிரசாரத்தை பிரதமர் மோடியே கையிலெடுத்திருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் தேர்வில் இந்தியா கூட்டணியின் ஃபார்முலா குறித்து மோடி பேசியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “பிரதமர் வேட்பாளர் யார் என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் பக்கம் 10 வருட ட்ராக் ரெக்கார்டுடன் உங்களுக்கு முன்னால் மோடி இருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரைத் தேடிக்கொண்டே இருக்கின்றன. இன்னும் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது சில ஊடகங்கள், வருடத்துக்கு ஒரு பிரதமர் என ஐந்து வருடங்களுக்கு ஐந்து பிரதமர் என்ற ஃபார்முலா பற்றி இந்தியா கூட்டணி விவாதித்து வருவதாகத் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் நாடு என்னவாகும்… அவர்கள் தற்போது பிரதமர் நாற்காலியை ஏலம் விடுகிறார்கள். ஒருவர் நாற்காலியில் உட்காருவார். அடுத்த நான்கு பேர் அவரது பதவிக்காலம் முடியும் வரை காத்திருப்பார்கள். இது நாட்டை அழிக்கும் ஒரு பயங்கரமான திட்டம். உங்கள் கனவுகள் அனைத்தையும் சிதைத்து விடும்” என்று கூறினார்.