நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கர்நாடகா, கேரளா என 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஒரு தொகுதி என 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான, கடைசி நாள் பிரசாரம் இன்று மாலையோடு ஓய்ந்தது. இதில், 2019-ல் கர்நாடகாவின் கலபுர்கியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த முறை இதே தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கும் தன் மருமகனுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தார்.
கலபுர்கியின் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்ட கார்கே, “இந்த முறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லையென்றால், இனி எனக்கான இடம் இங்கு இல்லையென்றும், உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன்.
நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, கலபுர்கிக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள். நான் அரசியலுக்காக பிறந்தவன். தேர்தலில் போட்டியிட்டாலும் சரி போட்டியிடவில்லையென்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டேன்.
அதேபோல், ஒருவர் தனது கொள்கையிலிருந்து ஒருபோதும் ஓய்வுபெறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை வீழ்த்துவதற்காக நான் பிறந்தேனே தவிர, அவர்கள் முன் சரணடைவதற்காக அல்ல. சித்தராமையாவிடம் கூட, நீங்கள் முதல்வர், எம்.எல்.ஏ போன்ற பதவிகளிலிருந்து ஒய்வு பெறலாம், ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறியிருக்கிறேன்” என்றார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் கலபுர்கி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த கார்கே, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2019 தேர்தலில் அதே தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில்தான், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் பா.ஜ.க 25 இடங்களைக் கைப்பற்றியது. அதன் பிறகு, காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்குள் நுழைந்த கார்கேவின் பெயர், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது, கலபுர்கி தொகுதியில் இவருக்கு மாற்றாக இவரின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி, பா.ஜ.க சிட்டிங் எம்.பி உமேஷ் ஜாதவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.