சத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தன்டேவாடா,

சத்தீஷ்காரில் தன்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் சிலர் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன் நேரில் சரணடைந்தனர்.

இவர்களில் எச்.பி.எம்.பி. என்ற பிரிவை சேர்ந்த தளபதி ஹித்ம ஓயம் (வயது 34), 3 பெண் நக்சலைட்டுகளான சம்பதி ஓயம் (வயது 23), கங்கி மத்கம் (வயது 28) மற்றும் ஹங்கி ஓயம் (வயது 20) உள்பட 18 பேர் அடங்குவர். இவர்கள் தெற்கு பஸ்டார் நகருக்கு உட்பட்ட பைரம்கார் மற்றும் மலங்கர் பகுதியில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகளின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுபற்றி தன்டேவாடா போலீஸ் சூப்பிரெண்டு கவுரவ் ராய் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலீசாரின் மறுவாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்களாகவே விரும்பி, சரணடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த பிரிவினர், நக்சலைட்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடும்போது, சாலைகளை தோண்டி போடுதல், சாலைகளை மறிக்கும் வகையில் மரங்களை வெட்டி போடுதல், சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம். மாவோயிஸ்டு கொள்கைகளில் அதிருப்தி அடைந்து அதில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், தன்டேவாடா பகுதியில் இதுவரை 738 நக்சலைட்டுகள் சரணடைந்து இருக்கின்றனர். அவர்களில் 177 பேரின் தலைக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.