DC vs GT Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் பரபரப்பான நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் 40வது லீக் போட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை (DC vs GT) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பிருத்வி ஷா – ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜேக் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், சந்தீப் வாரியர் வீசிய நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களை எடுத்திருந்தார். அதே ஓவரில் பிருத்வி ஷா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ஷாய் ஹோப்பும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 31 ரன்கள்…
இதை தொடர்ந்து, களமிறங்கிய அக்சர் படேல் – ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை தொடர்ந்து குவித்து வந்தது. இந்த ஜோடி 5.5 ஓவரில் இணைந்து நிலையில் 17 ஓவர்கள் வரை நின்று 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அக்சர் படேல் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சாய் கிஷோர் வீசிய 19வது ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்து அசத்தினார். மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் நான்கு சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அடிக்க மொத்தம் 31 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதன்மூலம், டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 88 ரன்களை எடுத்தார். குஜராத் பந்துவீச்சில் சந்தீப் வாரியர் மட்டும் 3 ஓவர்களை வீசி 15 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோகித் சர்மா 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 73 ரன்களை கொடுத்தார்.
மிரட்டிய சாய் சுதர்சன் – சாஹா
தொடர்ந்து, 225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி சீறிப்பாயந்த நிலையில் 2வது ஓவரில் கில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சனுடன், சாஹாவும் சிறப்பாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி 82 ரன்களை குவித்த நிலையில், சாஹா 39 ரன்களிலும், ஓமர்ஸாய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
டேவிட் மில்லர் உள்ள நுழைந்த சில ஓவர்களிலேயே சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 65 ரன்களை அடித்து வெளியேறினார். ஷாருக் கானும் சொதப்ப டேவிட் மில்லர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அலறவிட்டார். தேவாட்டியா 4 ரன்களிலும், மில்லர் 55 ரன்கலிலும் ஆட்டமிழக்க போட்டி ரஷித் கான் கைகளுக்கு சென்றது.
கடைசி கட்ட பரபரப்பு
ரஷிக் சலாம் வீசிய 19வது ஓவரில் சாய் கிஷோர் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்தில் 2 பவுண்டரிகள் பறந்தது. ஆனால், அடுத்த 2 பந்துகளில் எவ்வித ரன்களும் அடிக்கப்படவில்லை. 5வது பந்தில் சிக்ஸர் பறக்க கடைசி பந்தில் 5 ரன்களை தேவைப்பட்டடது. ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி 6வது இடத்திலும், குஜராத் 7வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் நான்கு வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் பெற்றுள்ளது.
So which side do you relate to after that fascinating finish
What a game THAT in Delhi!
Scorecardhttps://t.co/48M4ajbLuk#TATAIPL | #DCvGT pic.twitter.com/SuO21S3DWF
— IndianPremierLeague (@IPL) April 24, 2024
வெற்றிக்கு காரணம்
கடைசி பந்தில் பவுண்டரியை ஸ்டப்ஸ் தடுத்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ரஷிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 21 ரன்கள் அடித்தார். முக்கியமாக, முகேஷ் வீசிய 18வது ஓவரில் ரஷித் கான் ரன் ஏதும் அடிக்காதபோது, அபிஷேக் போரெல் அவரின் கேட்சை தவறிவிட்டார். இது ஒருபுறம் இருக்க, 19வது ஓவரில் ரஷித் கான் சிக்ஸருக்கு அடித்த பந்தை ஸ்டப்ஸ் தடுத்து, 5 ரன்களை சேமித்து கொடுத்தார். இதுவும் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆட்ட நாயகனாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்ட் தேர்வானார்.