3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன்,

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி பூமியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட்டில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், இந்த மிஷனை வரும் மே 6ம் தேதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ்க்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா வில்லியம்ஸ், 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.