புதுடெல்லி: சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளை தேவைப்படும் நபருக்கு மாற்றுவதே உறுப்பு தானமாகும். இதுதவிர நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்தில் கருணை அடிப்படையில் உறுப்பு தானம் செய்ய அனுமதி உண்டு.
ஆனால், வியாபார நோக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டோ, பணம் கொடுத்தோ உறுப்பு தானம் செய்வதும், பெறுவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலஅமைச்சகத்துக்கு உட்பட்டபொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் அனுப்பிய வழிகாட்டுதல்:
சட்ட விரோத உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதை தடுக்க உறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர், பெறுநர் ஆகிய இரு தரப்புக்கும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புஅடையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது நற்செய்தியே. பல மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக்குறைந்த செலவில் நடைபெறுவதே இதற்கு காரணம். அதேநேரத்தில் இந்திய சட்டப்படி அயல்நாட்டினர் இங்கு சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். வியாபார ரீதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுமேயானால் அது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவரங்கள், இதற்காக வரும் வெளிநாட்டினர் பற்றி மாதாந்திர அடிப்படையில் தகவல் சேகரித்து தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.