2024-ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு கமல், ரஜினி, சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் எல்லாமே அடுத்தடுத்த மாதங்களுக்குத் தள்ளிப் போயின. இந்நிலையில் இந்த மே மாதம் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இவை.
சென்ற 2023ம் ஆண்டின் மே மாதத்தில் ஒரு டஜன் படத்திற்கு மேல் வெளியானாலும் கூட பெரிய ஹீரோக்களின் படங்கள் எனச் சொல்லும்படி எதுவுமில்லை. விமலின் ‘குலசாமி’, ஜெய்யின் ‘தீரா காதல்’, அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’, யோகிபாபுவின் ‘காசே தான் கடவுளடா’, காஜல் அகர்வாலின் ‘கருங்காப்பியம்’, சாந்தனுவின் ‘ராவண கோட்டம்’, மணிகண்டனின் ‘குட் நைட்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’, விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ தவிர மேலும் சில படங்களும் வெளியாகின. இதில் கவனம் ஈர்த்த படங்கள் எது எதுவென உங்களுக்கே தெரிந்திருக்கும்.
இந்த மே மாதம் கமலின் ‘இந்தியன் 2’, விக்ரமின் ‘தங்கலான்’, தனுஷின் ‘ராயன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ஆகியவை வெளியாகலாம் எனப் பொங்கலின் போதே பேச்சு இருந்தது. ஆனால், இவை எதுவுமே இந்த கோடைக்கு ரிலீஸில்லை. அதே சமயம் கோடையைக் குறிவைத்து, சில படங்கள் ரிலிஸூக்கு ரெடியாகிவிட்டன.
தெலுங்குப் படம் என்றாலும் தமிழிலும் வெளியாகும் கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 4’, பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் ‘டீன்ஸ்’ சந்தானம் நடித்த ‘இங்க நான்தான் கிங்கு’, கவின் நடித்த ‘ஸ்டார்’, சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த ‘தி ஃபுரூப்’, ஆகியவை மே மாதத்தில் வெளியாகின்றன. இவை ரிலீஸ் உறுதி என்றாலும் கூட, அதிகாரபூர்வ தேதி, இன்னும் சில நாள்களுக்குப் பின்னர்தான் உறுதியாகும்.
கீர்த்தி சுரேஷின் ‘ரீவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’ இந்த இரண்டுமே ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன. அவற்றில் ஒன்றைத் திரைக்குக் கொண்டு வர முயன்றனர். ஆனால் இரண்டுமே வெளியீடு தள்ளிப்போகிறது எனத் தகவல். அதைப் போல துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்த ‘கருடன்’ ரிலீஸ் ஆகும் என்றனர். ஆனால், படத்தின் பேட்ச் வொர்க் வேலைகள் இன்னும் சில நாள்கள் இருப்பதால், அதனை முடித்த பின்னரே அறிவிப்பு வெளியாகும்.
மிஷ்கினின் ‘பிசாசு 2’, அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ படங்களும் வெளிவரும் ஐடியாவில் உள்ளன. இப்போதைக்குப் பெரிய படம் என்ற எதிர்பார்ப்பு ‘கல்கி 2898 ஏடி’க்கு இருக்கிறது. இதில் பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, அன்னா பென் என மல்டி ஸ்டார் காஸ்ட் களைகட்டுகிறது.
இதற்கிடையே அஜித்தின் பிறந்தநாளான மே முதல் தேதி அன்று ‘மங்காத்தா’, ‘பில்லா’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.