நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. இதில், கர்நாடகாவில் முதல் கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூருவில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட உணவகங்கள் மற்றும் பப் (Pub) நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள், நாளை ஜனநாயகக் கடமையாற்றும் வாக்காளர்களுக்குப் பல வகை சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்திருக்கின்றன.
கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்களைக் கொண்ட பெங்களூரு நகரில், 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு வாக்காளர்களை ஊக்குவிக்குவிக்கும் வகையில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதில் நிசர்கா கிராண்ட் ஹோட்டல், வாக்கு செலுத்திவிட்டு வரும் வாக்காளர்களுக்கு வெண்ணெய் தோசை,நெய் சோறு, மற்றும் குளிர்பானங்கள் அனைத்தும் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. அதேபோல், டெக் ஆஃப் பிரிவ்ஸ் ரெஸ்டோ-பப் (Resto-Pub), ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு ஏப்ரல் 27, 28 ஆகிய இரண்டு நாளில் இலவச மக் பீர் (mug beer) மற்றும் தள்ளுபடிகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறது.
மேலும், வேறு ஒரு பப் (pub) நிறுவனமான சோசியல் (SOCIAL) புதியதொரு முறையை இதில் கையாண்டிருக்கின்றது. அதாவது, தேர்தலுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பில்லில் (bill) வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாசகங்களை எழுதிக் கொடுத்திருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு அதைக் கொண்டுவரும் வாக்காளர்கள் அதைக் காண்பித்து தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லில் 20 சதவிகித தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை ஒரு வாரம் வரை இருக்கும் என்றும், எல்லாம் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நகரங்களில் இந்த சலுகை உண்டு என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இன்னொருபக்கம், ரேபிடோ (Rapido) நிறுவனம், வாக்களிக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு ஆட்டோ ரைடு, கேப் ரைடு ஆகியவை இலவசம் என அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ரேபிடோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குண்ட்டுப்பள்ளி, “பெங்களூர், மைசூர், மங்களூர் நகர மக்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இந்த முயற்சி. அதிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பிறரைப்போலவே செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். மேற்கண்ட இடங்களில் இத்தகைய சலுகைகளைப் பெற வாக்கு செலுத்தியதற்கான அடையாளமான ஆள் காட்டி விரலில் மை அச்சு இருந்தால் போதும் வேறு எந்த ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று சலுகை தரும் அனைத்து நிறுவனங்கள் தெரிவித்திருக்கிறது.